சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவேன்- எடப்பாடி பழனிசாமி உறுதி
- எடப்பாடி பழனிச்சாமியிடம் அப்பகுதி விவசாயிகள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
- விவசாயிகளை வாழ வைக்கும் குளத்தை அழித்து தொழில்பேட்டை அமைக்கும் திட்டத்தை நிறுத்த தமிழக அரசை வலியுறுத்துவேன்.
ரெட்டியார்சத்திரம்:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, மதுரையில் இருந்து கோவை செல்லும் வழியில் ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளிமந்தையம் அருகே உள்ள அப்பியம்பட்டி நால்ரோடு கிராமத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு உணவிற்காக காய்கறிகளை அனுப்பி வரும் ஒட்டன்சத்திரம் பகுதி விவசாயிகளை நசுக்கின்ற திட்டமாக தொழில்பேட்டை அமைக்கும் திட்டத்தை கொத்தையம் கிராமத்தில் தி.மு.க. அரசு கொண்டு வந்து விவசாயிகளையும் விவசாயத்தையும் அழிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அத்திட்டத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமியிடம் அப்பகுதி விவசாயிகள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் அங்கு எடப்பாடி பழனிச்சாமியிடம் கொத்தையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ் தலைமையில் அ.தி.மு.க. கிளை செயலாளர் வஞ்சிமுத்து மற்றும் கிராம மக்கள் கொத்தையம் கிராமத்தில் குளத்தை அழித்து தொழில்பேட்டை அமைக்க உள்ளதை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
மனுவை பெற்ற எடப்பாடி பழனிச்சாமி விவசாய நிலங்களை அழித்து தொழில்பேட்டை அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டி வருகின்ற 20ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவேன்.
விவசாயிகளை வாழ வைக்கும் குளத்தை அழித்து தொழில்பேட்டை அமைக்கும் திட்டத்தை நிறுத்த தமிழக அரசை வலியுறுத்துவேன் என்று கிராம மக்களிடம் உறுதி அளித்தார். பின்னர் அங்கிருந்து கோவை புறப்பட்டுச்சென்றார்.