தி.மு.க ஆட்சியில் மக்கள் வேதனையுடன் உள்ளனர்- எடப்பாடி பழனிசாமி
- தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு பெரிதாக எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை.
- கோவையில் 133 ஒப்பந்தங்கள் கொண்டு வரப்பட்டு 11 முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சேலம்:
தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் அய்யாதுரை பாண்டியன் உட்பட 100 பேர் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் அவரது முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை பொன்னாடை அணிவித்து தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க இடைக்கால பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வரவேற்றார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவி தொடர்பாக சிலர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரித்த கோர்ட்டில் 95 சதவீதம் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு ஆதரவாக உள்ளதை தெரிவித்துள்ளோம். சுப்ரீம் கோர்ட்டு பொதுச் செயலாளர் தேர்தலை தற்போது நடத்தக்கூடாது என்று கூறியுள்ளது. ஆனால் தடை விதிக்கவில்லை, நாங்களும் வழக்கு முடியும் வரை பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த மாட்டோம் என்று உறுதி கூறியுள்ளோம்.
தமிழகத்தில் அரசு பணி மிகவும் மெத்தனமாக நடைபெறுகிறது. அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் தற்போது தி.மு.க ஆட்சியில் நிறுத்தி வைத்துள்ளது.
தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு பெரிதாக எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்திற்கு 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தோம், மேலும் சட்டக்கல்லூரிகளையும் கொண்டு வந்து திறந்து வைத்தோம். ஆனால் தி.மு.க பெரிதாக என்ன திட்டத்தை கொண்டு வந்தது.
கோவையில் 133 ஒப்பந்தங்கள் கொண்டு வரப்பட்டு 11 முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. காரணம் என்னவென்றால் அதிகமாக கமிஷன் கேட்பதுதான். மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சிகளில் பெரும்பாலான பணிகள் முடங்கிய நிலையில் உள்ளன. அ.தி.மு.க ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உடனுக்குடன் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டன. தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.
2 ஆண்டுகளாக வாழ்வாதாரம் இழந்து கொரோனா காலத்திற்கு பின் மக்கள் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் மின் கட்டணம் 53 சதவீதம் அதிகரித்துள்ளது, சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நிம்மதி இல்லாமல் உள்ளனர். அனைத்து தரப்பினரும் தினமும் துன்பத்துடனும், வேதனையும் தவித்து வருகிறார்கள்.
தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் கூறினார்கள். ஆனால் நீட் தேர்வு ரத்து செய்தார்களா? அதற்காக பாராளுமன்றத்தில் ஏதாவது குரல் கொடுத்தார்களா? எதுவும் செய்யவில்லை.
காவிரி பிரச்சனையில் விவசாயிகளுக்காக அ.தி.மு.க எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து 11 நாட்கள் பாராளுமன்றத்தை முடங்க செய்தனர். விவசாயிகளுக்கு அ.தி.மு.க. எப்போதும் ஆதரவாக செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, எம்.எல்.ஏ.க்கள் இசக்கி சுப்பையா, கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா உள்பட பலர் உடன் இருந்தனர்.