தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு கோவில் கட்டிய விவசாயி- தினமும் பூஜை செய்து வழிபாடு

Published On 2024-07-12 08:58 GMT   |   Update On 2024-07-12 08:58 GMT
  • பிரதமர் மோடியின் திட்டங்களால் பயன் அடைந்த நான் அவர் மீதான அதிக அன்பின் காரணமாக அவருக்கு கோவில் கட்டியுள்ளேன்.
  • பிரதமர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற ஆசையும் உள்ளது.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். விவசாயியான அவர், துபாயில் வேலை பார்த்து வந்த அவர் சொந்த ஊர் திரும்பியதும் விவசாயத்தில் ஈடுபட்டார். பிரதமர் மோடியின் திட்டங்களால் ஈர்க்கப்பட்ட அவர் அந்த திட்டங்களால் பயன் அடைந்தார்.

இதனால் பிரதமர் மோடி மீதான அதிக ஈடுபாட்டின் காரணமாக அவருக்கு கோவில் கட்ட திட்டமிட்டார். இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டில் அவர் மோடிக்கு சிலை அமைத்து கோவில் எழுப்பினார். ரூ.1.25 லட்சம் செலவு செய்து 6 மாதமாக கோவில் திருப்பணியில் ஈடுபட்டார்.

இவர் கட்டியுள்ள கோவிலில் பிரதமர் மோடிக்கு அழகிய மார்பளவு சிலை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவிலில் சாமி படங்களுடன், காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, மோடி, அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது படங்களையும் வைத்துள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு விவசாயத்தில் விளைச்சல் அதிகரித்தால் சிறப்பு வழிபாடு செய்வது என்றும்,பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமர் ஆகவேண்டும் எனவும் வேண்டுதல் வைத்தார்.

அவரது வேண்டுதல் நிறைவேறியதை தொடர்ந்து மோடிக்கு தான் கட்டிய கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடியின் திட்டங்களால் பயன் அடைந்த நான் அவர் மீதான அதிக அன்பின் காரணமாக அவருக்கு கோவில் கட்டியுள்ளேன். இப்போது தேங்காய், மாங்காய், மரவள்ளி போன் விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைப்பதால், மோடியை கடவுளாக நினைத்து தினமும் பூஜை செய்து, வழிபாடு நடத்தி வருகிறேன்.

ஒவ்வொரு விவசாய சாகுபடியிலும் கிடைத்த லாபத்தில் 10 ஆயிரம் ரூபாய் வீதம் எடுத்து வைத்து, 5 ஆண்டுகளாக கணிசமான தொகை வைத்துள்ளேன். அவர் 3-வது முறை பிரதமாக வேண்டும், என்று பழநி முருகனிடம் வேண்டுதல் வைத்தேன்.

அந்த வேண்டுதல் நிறைவேறி உள்ளதால், பழனியில் தங்கத்தேர் இழுத்து நேர்த்திக் கடன் செலுத்த உள்ளேன். இது தவிர, என் வயலில் விளைந்த 10 மூட்டை நெல்லில், கிடாவெட்டி ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்து உள்ளேன்.

பிரதமர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. எனக்கு பிறகும், நிலத்தில் ஒரு பகுதியை இந்த கோவிலுக்காக நிலத்தை எழுதி பத்திரம் போட்டு வைத்துள்ளேன். பிரதமர் நீடுழீ வாழ வேண்டும். 2030-ம் ஆண்டு வரை அவர் பிரதமராக இருந்து விவசாயிகளுக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது தான் என் ஆசை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News