தமிழ்நாடு
கலைஞர் நூற்றாண்டு மாரத்தான்.. வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கினார்
- மாரத்தான் போட்டி 42 கி.மீ., 21 கி.மீ., 10 கி.மீ., 5 கிலோ மீட்டர் ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்டது.
- 9 பிரிவுகளில் மொத்தம் 10.70 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
சென்னை:
கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு உலக சாதனை முயற்சியாக பன்னாட்டு மாரத்தான் போட்டி இன்று நடத்தப்பட்டது. 42 கி.மீ., 21 கி.மீ., 10 கி.மீ., 5 கிலோ மீட்டர் என போட்டி நடத்தப்பட்டது. கலைஞர் நினைவிடம் அருகில் தொடங்கிய இப்போட்டிகள் காமராஜர் சாலை, கலங்கரை விளக்கம், பட்டினப்பாக்கம், முத்து லெட்சுமி பார்க், பெசன்ட் நகர், இந்திரா நகர், ஓ.எம்.ஆர்.சாலை, வாலாஜா சாலை, சிவானந்தா சாலை வழிகளில் நடைபெற்றது. இதில் 73 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா தீவுத்திடலில் நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார். 9 பிரிவுகளில் மொத்தம் 10.70 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் பலர் பங்கேற்றனர்.