கள்ளச்சாராய சம்பவம்: சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்- டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்
- மரக்காணம் கள்ளச்சாராய விவகாரத்திலேயே, கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்டதாக முதலமைச்சர் அறிவித்தார்.
- காவல் துறையினரை ஆளங்கட்சியினர் செயல்படாமல் வைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் 56 பேர் பலியாகினர். மேலும், கள்ளக்குறிச்சி, முண்டியம்பாக்கம், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், புதுவை ஜிப்மர் மருத்துவமனையிலும் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கள்ளக்குறிச்சிக்கு இன்று வந்தார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் பலியானது துயரமான சம்பவமாகும். மேலும், பலி எண்ணிக்கை உயரும் அபாயமும் உள்ளது. பலியானவர்களுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் அளித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகள் உள்ள போது, கள்ளச்சாராய பலிக்கு இவ்வளவு தொகை அறிவிப்பது தவறான முன்னுதாரணமாக மாறி விடக்கூடாதென பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். இதனையும் அரசு பரிசீலிக்க வேண்டும்.
தங்கள் மீதான குற்றச்சாட்டை நிருபிக்க முடியுமா என தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் கூறியுள்ளனர். வரும் தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்குகளே இதற்கு நிருபனமாக அமையும். தி.மு.க.வினருக்கும், கள்ளச்சாராயத்திற்கும் சம்மந்தமில்லை எனில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கள்ளக்குறிச்சிக்கு வந்திருக்கலாமே என்று கேள்வி எழுப்பினார்.
காவல் துறையினரை ஆளங்கட்சியினர் செயல்படாமல் வைத்துள்ளனர். கள்ளச்சாராய விற்பனையில் ஆளுங்கட்சி தலையீடு உள்ளது என அனைத்து தரப்பு மக்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். மரக்காணம் கள்ளச்சாராய விவகாரத்திலேயே, கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்டதாக முதலமைச்சர் அறிவித்தார். ஆனால், கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையம் பின்புறம் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதால் தான் எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயனுக்கு தொடர்பு உள்ளதாக பொதுமக்களே பேசுகின்றனர். இதைத்தான் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
எனவே, இது தொடர்பாக சி.பி,ஐ விசாரணை நடத்த வேண்டுமென அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வலியுறுத்துகிறது. அப்போதுதான் கள்ளச்சாராய வியாபாரிகளும், அதற்கு உடந்தையாக இருந்த அரசியல்வாதிகளும் பிடிபடுவார்கள். இது மற்றவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.