பா.ஜனதா எதிர்க்க எதிர்க்க தான் நாங்கள் வளர்ந்து கொண்டே இருப்போம்- கனிமொழி
- ஒவ்வொரு நாட்டிலும் வெறுப்பு அரசியலை விதைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
- 100 ஆண்டுகள் கடந்த பின்னரும் பெரியார் சிலை மீது காவி சாயத்தை ஊற்றுகிறார்கள்.
சென்னை:
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று, திராவிடர் கழகம் சார்பில் 'பெரியார் விஷன்' என்ற ஓ.டி.டி. தளத்தை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., நடிகர் சத்தியராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
அனைவரின் சுதந்திரத்திற்காகவும் பாடுபட்டவர் பெரியார். பா.ஜனதா எங்களை எதிர்க்க எதிர்க்க தான் நாங்கள் வளர்ந்துகொண்டே இருப்போம். ஒவ்வொரு நாட்டிலும் வெறுப்பு அரசியலை விதைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
100 ஆண்டுகள் கடந்த பின்னரும் பெரியார் சிலை மீது காவி சாயத்தை ஊற்றுகிறார்கள். பெரியாரை தொடர்ந்து கொச்சைப்படுத்தும் போது தான் பெரியார் என்பவர் யார் என்று இந்த தலைமுறை பேச ஆரம்பித்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, நடிகர் சத்யராஜ் பேசுகையில், 'நாங்கள் எப்போதுமே எதிர்ப்பில் தான் வளர்வோம். எதிர்ப்பு இருந்தால் தான் நன்றாக இருக்கும். கருணாநிதியை விட மிகவும் வேகமான ஒருவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். பெரியாரை விஞ்ஞானமயப்படுத்துவது மிகவும் அவசியம்' என்றார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, 'தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த நிலையில் மக்களிடம் பல மூடநம்பிக்கைகள் ஒளிந்து இருக்கிறது.
எனவே, பெரியார் இன்றும் தேவைப்படுகிறார். எந்த ஊரில் பெரியாரை எதிர்த்தார்களோ அதே ஊரில் அவருக்கு சிலை வைத்துள்ளார்கள். அந்த அளவிற்கு மக்களின் நம்பிக்கையை பெற்றவர் பெரியார்' என்றார்.