மாமல்லபுரம் புராதன சின்னங்கள் மீது ரசாயனம் பூசி பராமரிப்பு
- மாமல்லபுரம் சிற்பங்களில் உள்ள மாசுக்களை படிமங்களை தொல்லியல் துறை இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ரசாயனம் பூசி சுத்தம் செய்வது வழக்கம்.
- புராதன சின்னங்கள் மீது வேதியியல் பிரிவு என்ஜினியர்கள் முன்னிலையில் காகிதம், மரத்தூள், ரசாயனம் கலந்த கூழ்மம் சிற்பங்களில் தடவப்படும்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோயில், ஐந்துரதம் சிறப்பு பெற்றது.
இதில் உள்ள சிற்பங்களில் கடல் காற்று உப்பு, மழையால் ஏற்படும் பாசி, காற்றில் உருவாகும் மண் தூசி, வாகனப்புகை, பறவைகள் எச்சம் உள்ளிட்ட மாசு படிந்து காணப்படுகிறது.
சிற்பங்களில் உள்ள மாசுக்களை படிமங்களை தொல்லியல் துறை இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ரசாயனம் பூசி சுத்தம் செய்வது வழக்கம். ஆனால் கொரோனா கட்டுப்பாடு, ஊரடங்கு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக சிற்பங்கள் தூய்மை பராமரிப்பு பணிகள் செய்யாமல் பொலிவிழந்து காணப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடு தளர்வுக்கு பிறகு தற்போது மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்வையிட உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் வரத்தொடங்கி உள்ளனர். இதனால் புராதன சின்னங்களின் தூய்மை பராமரிப்பு பணிகளை விரைவாக செய்து முடிக்க தொல்லியல் துறை நிதி ஒதுக்கி 3 ஆண்டுக்கு பிறகு தற்போது பணிகளை தொடங்கி உள்ளது.
முதற்கட்டமாக புராதன சின்னங்களில் சாரம் அமைக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து வேதியியல் பிரிவு என்ஜினியர்கள் முன்னிலையில் காகிதம், மரத்தூள், ரசாயனம் கலந்த கூழ்மம் சிற்பங்களில் தடவப்படும்.
ஒரு வாரத்துக்கு பின்னர் அவை அகற்றப்படும் என்று தெரிகிறது. இதனால் புராதன சின்னங்கள் எப்போதும் போல் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும் என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.