மனநலம் பாதித்து காணாமல் போனவர்- 5 ஆண்டுகளுக்கு பிறகு கணவர், குழந்தைகளுடன் சேர்ந்த பெண்
- ஆந்திராவில் உள்ள சமூக சேவகர்கள் மூலம் ராமலெட்சுமியின் குடும்பத்தினரை தேடி கண்டு பிடித்துள்ளார்கள்.
- ராமலெட்சுமி மீட்கப்பட்டு நலமுடன் இருக்கும் தகவல் கேட்டதும் கணவர், குழந்தைகள் உள்பட குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னை:
கடந்த ஆண்டு ஜனவரி 10-ந்தேதி மனநலம் பாதித்த நிலையில் அம்பத்தூர் தெருவில் அலைந்துகொண்டிருந்த ஒரு பெண் பற்றி உதவும் கரங்கள் அமைப்புக்கு போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.
உடனே அங்கிருந்து சமூக சேவகர்கள் சென்று அந்த பெண்ணை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு மன நல சிகிச்சை மற்றும் கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் சுய நிலைக்கு திரும்பிய அந்த பெண் தன்னை பற்றியும், தனது ஊரை பற்றியும் கொஞ்சம் கொஞ்சமாக நினைவுபடுத்தி தகவல்கள் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள மயிலாவரம் பகுதியில் பெட்டா கேமரலா கிராமத்தை சேர்ந்தவர். அவரது பெயர் ராமலெட்சுமி (31). கணவர் பெயர் பக்துலா ஸ்ரீனு என்பது தெரிய வந்தது.
இதையடுத்து ஆந்திராவில் உள்ள சமூக சேவகர்கள் மூலம் ராமலெட்சுமியின் குடும்பத்தினரை தேடி கண்டு பிடித்துள்ளார்கள்.
ராமலெட்சுமிக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு மன நல பாதிப்பு ஏற்பட்டதாகவும் 5 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய் விட்டதாகவும் தெரிவித்தனர். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் விட்டு விட்டனர்.
இந்த நிலையில் ராமலெட்சுமி மீட்கப்பட்டு நலமுடன் இருக்கும் தகவல் கேட்டதும் கணவர், குழந்தைகள் உள்பட குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
கணவருடன் சேர்ந்த மகிழ்ச்சியில் ராமலெட்சுமி ஆனந்த கண்ணீர் வடித்தார். குடும்பத்தினரும் அவரை கட்டித்தழுவி வரவேற்றனர்.