சென்னையில் 203 சுடுகாடுகளில் குப்பைகள்-செடிகள் அகற்றம்
- கடந்த 30-ந்தேதி சென்னையில் உள்ள பஸ் நிறுத்தங்களில் உள்ள நிழற் கூடங்களை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.
- நெசப்பாக்கம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் உள்ள சுடுகாடுகளில் குப்பைகளை அகற்றினார்கள்.
சென்னை:
சென்னை மாநகரை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.
சாலைகள், பஸ்நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள், நிழற் கூடங்களில் குப்பைகள், போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்ததை அகற்றி வருகிறார்கள். கடந்த 30-ந்தேதி சென்னையில் உள்ள பஸ் நிறுத்தங்களில் உள்ள நிழற் கூடங்களை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.
இந்த நிலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 203 சுடுகாடுகளில் தீவிர தூய் மைப்பணி இன்று காலை 6 மணியில் இருந்து 8 மணி வரை நடந்தது. சுடுகாடு மற்றும் இடுகாடுகளில் மண்டி கிடந்த முட்புதர்கள், செடிகள், குப்பைகள், கட்டிட கழிவுகளை தூய்மை பணியாளர்கள் அகற்றினார்கள். 15 மண்டலத்திற்கு உட்பட்ட சுடுகாடுகளில் மாநகராட்சி மண்டல அலுவலர்கள் தலைமையில் தூய்மை பணி நடந்தது.
திருவொற்றியூர் நவீன எரியூட்டும் மயான பூமி, ஈஞ்சம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மயிலாப்பூர், ஆலப்பாக்கம், புழல், எண்ணூர், சாந்தி நகர், நெசப்பாக்கம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் உள்ள சுடுகாடுகளில் குப்பைகளை அகற்றினார்கள்.
பொதுவாக மயானங்களில் தூய்மைப் பணி நீண்ட காலமாக செய்யாததால் குப்பைகள், சடங்குகள் செய்வதற்காக கொண்டு வரப்பட்ட கழிவுகள் ஆங்காங்கே கிடந்தன. அவற்றை சேகரித்து லாரிகளில் ஏற்றினர். மரம், செடி களின் இலைகள் உதிர்ந்து குப்பைகளாக காட்சியளித்தன. அவையெல்லாம் அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்பட்டது.