தமிழ்நாடு

'ராக்கிங்' பிரச்சினையால் திருப்பூர் மாணவன் தற்கொலை- கல்லூரி மாணவர்கள் 3 பேரிடம் போலீசார் விசாரணை

Published On 2025-01-05 07:20 GMT   |   Update On 2025-01-05 07:20 GMT
  • சத்ய நாராயணன் தற்கொலை செய்வதற்கு முன்பு, தனது உறவினா்கள் மற்றும் நண்பா்கள் சிலருக்கு வாட்ஸ்அப் மூலமாக ஆடியோ பதிவு ஒன்றை அனுப்பி உள்ளார்.
  • விசாரணை முடிவில் சத்யநாராயணன் தற்கொலைக்கான காரணம் குறித்து முழு விவரம் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்:

திருப்பூா் பச்சையப்பன் நகா் முதல் வீதியைச் சோ்ந்தவா் நாகராஜ். இவரது மனைவி வேலுமணி. இவா்களது மகன் சத்யநாராயணன் (வயது 21) .கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்று வந்தாா்.

நேற்று வீட்டின் மாடியில் உள்ள அறையில் சத்ய நாராயணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே சத்ய நாராயணன் தற்கொலை செய்வதற்கு முன்பு, தனது உறவினா்கள் மற்றும் நண்பா்கள் சிலருக்கு வாட்ஸ்அப் மூலமாக ஆடியோ பதிவு ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், ஒரு மாணவரின் பெயரை குறிப்பிட்டு அவா் தொடா்ந்து மிரட்டுவதாகவும், வகுப்பறையில் வைத்து அடித்ததில் இருந்து தன்னால் தூங்க முடியவில்லை. இது குறித்து கல்லூரியில் புகாா் தெரிவித்தால், வெளி ஆட்களை அழைத்து வந்து என்னை ஏதாவது செய்து விடுவாா்களோ? என்று பயமாக உள்ளது. ஆகவே, தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் எனக்கு வருகிறது என பதிவாகியிருந்தது.

எனவே சத்யநாராயணன் 'ராக்கிங்' காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது தொடர்பாக 3 மாணவர்களிடம் அதிரடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் சத்யநாராயணன் தற்கொலைக்கான காரணம் குறித்து முழு விவரம் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News