சென்னை தலைமைச் செயலகம், போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
- தலைமைச் செயலகத்தில் கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
சென்னை:
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் போனில் பேசினார்.
சென்னை தலைமைச் செயலகம், டி.ஜி.பி. அலுவல கம் ஆகியவற்றில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு அவர் போனை துண்டித்துவிட்டார். இதையடுத்து போலீசார் உஷார் படுத்தப்பட்டு 2 இடங்களிலும் தீவிரசோதனை நடத்தப்பட்டது.
வெடிகுண்டு நிபுணர்களும் நேரில் சென்று தலைமைச் செயலகம், டி.ஜி.பி. அலுவலகம் ஆகியவற்றில் அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்தனர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
இருப்பினும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிப்பதற்காக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போனில் பேசிய நபரின் தொலைபேசி எண்ணை வைத்து அவரை கண்டு பிடிக்கும் பணியில் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவல கங்கள் ஆகியவற்றுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், டி.ஜி.பி. அலுவலகத்திற்கும், தலைமைச் செயலகத்துக்கும் ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபை கூட்டம் நாளை தொடங்க உள்ள நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதால் தலைமைச் செயலகத்தில் கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.