சட்டசபையில் உரையாற்ற கவர்னர் ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் அப்பாவு நேரில் அழைப்பு
- சபா நாயகா் அப்பாவு இன்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
- அவரது சொந்த கருத்தையும் சேர்த்து பேசியதால் பிரச்சினை ஏற்பட்டது.
சென்னை:
தமிழக சட்டசபைக் கூட் டம் வருகிற 6-ந்தேதி கூடுகிறது. கவர்னர் ஆர்.என்.ரவி இந்த கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
2025-ம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் மரபுபடி கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபைக்கு வந்து உரையாற்றி கூட்டத்தை தொடங்கி வைப்பார்.
அவரை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் வாசலில் நின்று வரவேற்று பூங்கொத்து வழங்கி சட்ட சபைக்குள் அழைத்து வருவார்கள்.
சட்டசபையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதும் அரசின் உரையை கவர்னர் ஆர்.என்.ரவி வாசிப்பார். அதைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு அதை தமிழில் வாசிப்பார்.
கடந்த ஆண்டு சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி அரசின் முழு உரையையும் வாசிக்காமல் முதல் பக்கத்தையும் கடைசி பக்கத்தையும் மட்டும் வாசித்துவிட்டு அமர்ந்துவிட்டார்.
அவரது சொந்த கருத்தையும் சேர்த்து பேசியதால் பிரச்சனை ஏற்பட்டது. அவர் கூட்டம் முடியும் முன்பே பாதியிலேயே வெளியே சென்று விட்டார்.
அதன் பிறகு அரசுக்கும் அவருக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டது. பின்னர் இணக்கமான சூழல் உருவானது.
இப்போது 2025-ம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் சட்டசபையில் உரையாற்ற வருமாறு கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகா் அப்பாவு இன்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது சட்டசபை செயலாளர் சீனிவாசன் உடன் இருந்தார்.