தமிழ்நாடு

பாதிப்புக்கு நிதி கேட்டால் ரெய்டு நடத்தி நெருக்கடி கொடுக்கும் மத்திய அரசு- அமைச்சர் குற்றச்சாட்டு

Published On 2025-01-03 08:08 GMT   |   Update On 2025-01-03 08:08 GMT
  • மழை புயலால் பயிர்களின் பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது.
  • தமிழக அரசே நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) இன்று (வெள்ளிக்கிழமை) வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு, கண்காட்சியை தமிழக வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்களுக்கு மாதந்தோறும் உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்றும் அளவிற்கு திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது.

வடிகால் வாய்க்கால், கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சரே நேரடியாக ஆய்வு செய்தார். இதனால் மழை புயலால் பயிர்களின் பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் பயிர்கள் பாதிப்புக்காக ரூ.1,023 கோடி அளவிற்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழை புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது. 4 வகையான அளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப நிவாரணம் வழங்கப்படும்.

மத்திய அரசு நாம் கேட்ட நிவாரணத்தை வழங்கவில்லை.

இருந்தாலும், தமிழக அரசே நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று அமைச்சர் துரைமுருகன் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. நாம் பாதிப்புக்கு நிதி கேட்டால் அதற்கு மத்திய அரசு இதுபோல் ரெய்டு நடத்தி நெருக்கடி கொடுக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News