தமிழ்நாடு (Tamil Nadu)

பொங்கல் பண்டிகை: உடுமலையில் வெல்லம் தயாரிப்பு பணிகள் தீவிரம்

Published On 2022-12-21 05:54 GMT   |   Update On 2022-12-21 05:54 GMT
  • அமராவதி சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை ஒப்பந்த அடிப்படையில் வழங்கி வருகின்றனர்.
  • பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க பல பிரசாத கடை உரிமையாளர்கள் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெல்லம் கொள்முதல் செய்கின்றனர்.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் அமராவதி பாசன பகுதிகளில் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் கரும்பு பயிரிடப்பட்டு வருகிறது. கரும்பு விவசாயிகளில் பலர் அமராவதி சர்க்கரை ஆலைக்கு தங்களது கரும்புகளை ஒப்பந்த அடிப்படையில் வழங்கி வருகின்றனர். ஒரு சில விவசாயிகள் தாங்களாகவே கரும்பினை அறுவடை செய்து பாகுகாய்ச்சி அவற்றை உருண்டை வெல்லமாகவும் அச்சு வெல்லமாகவும் நாட்டுச்சர்க்கரையாகவும் மாற்றி சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

இதில் பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க பல பிரசாத கடை உரிமையாளர்கள் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெல்லம் கொள்முதல் செய்கின்றனர். இது தவிர கேரள மாநிலம் சபரிமலை, குருவாயூர் கிருஷ்ணன் கோவில் போன்றவற்றில் வழங்கப்படும் பிரசாதத்திற்கும் உடுமலையிலிருந்து வெல்லம் கொள்முதல் செய்யப்படுகிறது.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது தமிழகத்தில் வெல்ல விற்பனை சூடுபிடிக்கும். தற்போது உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் வெல்லம் தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News