சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
- தங்கம் கடத்தி வந்த 2 பயணிகளிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மற்றொரு விமானத்தில் சென்னையைச் சேர்ந்த பயணி 1,200 இ-சிகரெட்டுகளை கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆலந்தூர்:
சென்னைக்கு பல்வேறு விமானங்களில் பெருமளவு கடத்தல் பொருட்கள் வருவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க அதிகாரிகள் தனிப்படை அமைத்து வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து விமானங்களையும் கண்காணித்தனர்.
இந்த நிலையில் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த 2 பயணிகளின் உடமைகளை சோதனையிட்டபோது அதில் தங்க நாணயத்தில் வெள்ளி மூலாம் பூசப்பட்டு கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து மொத்தம் 781 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.39 லட்சம் ஆகும். தங்கம் கடத்தி வந்த 2 பயணிகளிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த செந்தூர் என்பவர் கையில் தங்க வளையம், விரலில் மோதிரம், மற்றும் கழுத்தில் தங்கச் செயினை அதிக அளவு அணிந்து வந்திருந்தார். அதிகாரிகள் சோதனை செய்தபோது அந்த நகைகள் 24 கேரட் சுத்த தங்கம் என்பது தெரியவந்தது . சுத்த தங்கத்தை கடத்துவதற்காக அவர் ஆபரணம் போல் உருவாக்கி அணிந்து வந்துள்ளார். அவரிடம் இருந்து மொத்தம் 497 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.30 லட்சம்.
சார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் மதுரையைச் சேர்ந்த பயணி ஒருவர் தனது உடமைக்குள் மறைத்து கடத்தி வந்த 366 கிராம் தங்க நகைகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 21 லட்சம் ஆகும். துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் சென்னையைச் சேர்ந்த பயணி 1,200 இ-சிகரெட்டுகளை கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 30 லட்சம்.
சென்னை விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகள் அடுத்தடுத்து நடத்திய சோதனைகளில் சுமார் ரூ.1 கோடி மதிப்புடைய தங்கம், இ-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு மொத்தம் 5 பேர் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் கடத்தி வந்த பயணிகளிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.