தமிழ்நாடு

மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 100 பவுன் நகை கொள்ளை- போலீசார் விசாரணை

Published On 2024-10-03 10:02 IST   |   Update On 2024-10-03 10:08:00 IST
  • திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு சவரிமுத்து புகார் அளித்தார்.
  • சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல்-பழனி சாலை பைபாஸ் பகுதியில் நைனார் முகமது தெருவில் வசித்து வருபவர் சவரிமுத்து. இவர் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்டெல்லா. இவரும் ஜம்புளியம்பட்டி அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது ஒரே மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணத்திற்காக ஜவுளி எடுக்க குடும்பத்துடன் திருச்சிக்கு சென்றனர்.

இரவு 11 மணியளவில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் உள்ளே இருந்த கதவின் பூட்டும் கம்பியால் நெளிக்கப்பட்டு திறந்து கிடந்தது. பீரோவில் மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 100 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு சவரிமுத்து புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி. பிரதீப் தலைமையில் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த பகுதியில் மொத்தம் 10 வீடுகள் மட்டுமே உள்ளன. ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதை கவனித்தும், இவர்கள் வீட்டில் திருமணத்திற்கு நகைகள் இருப்பதை நோட்டமிட்டும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர். மேலும் மோப்பநாயை வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு டாக்டர் வீட்டில் 100 பவுன் நகை மற்றும் ரூ.பல லட்சம் ரொக்கம் கொள்ளை போனது. அந்த வழக்கில் இதுவரை கொள்ளையர்கள் பிடிபடாத நிலையில் தற்போது மீண்டும் ஒரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News