ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் 2 தரைப்பாலங்கள் மூழ்கின- 25 கிராமங்கள் துண்டிப்பு
- பொன்னேரி லட்சுமிபுரம் அணைக்கட்டு முழுவதும் நிரம்பி வழிகிறது.
- மேம்பால பணியை மழை காலம் முடிந்ததும் தொடங்கி விரைவில் முடிக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பெரியபாளையம்:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கர்னீத் மலைப் பகுதியில் தொடங்கும் ஆரணி ஆறு பிச்சாட்டூர் அணையின் முனைப்பை கடந்து தமிழக பகுதியான ஊத்துக்கோட்டை, பெரிய பாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக லட்சுமிபுரம் அணைக்கட்டை கடந்து பழவேற்காடு முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கின்றது.
இந்தநிலையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொன்னேரி லட்சுமிபுரம் அணைக்கட்டு முழுவதும் நிரம்பி வழிகிறது. அணைக்கட்டில் இருந்து 4300 கன அடி மழைநீர் வெளியேறி ஏ.ரெட்டிபாளையம் தடுப்பணைக்கு சென்று அங்கிருந்து 3800 கன அடி நீர் முகத்துவாரம் வழியாக பழவேற்காடு கடலில் கலக்கிறது. லட்சுமிபுரம் அணைக்கட்டில் இருந்து செல்லும் உபரி நீரால் பெரும்பேடு மற்றும் காட்டூர் தத்தை மஞ்சி ஏரிகள் முழுகொள்ளவை எட்டி உள்ளது.
பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், காட்டூர், தத்தை மஞ்சி, கல்பாக்கம், கோளூர், திருப்பாலைவனம், வஞ்சி வாக்கம், மெதுர், காட்டூர், வேலூர், தேவம்பட்டு, மடிமை கண்டிகை, அத்தமஞ்சேரி பெரும்பேடுக்குப்பம், உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்களில் மழை நீர் வெளியேற முடியாமல் தேங்கி காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதற்கிடையே ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பெரியபாளையம் அருகே உள்ள புதுப்பாளையம்-அஞ்சாத்தம்மன் கோவில் இடையே உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதேபோல், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மங்களம் ஊராட்சியில் மங்களம்-ஆரணி இடையே ஆரணி ஆற்றில் பொது மக்கள் சார்பில் அமைக்கப்பட்ட சிறிய தரைப்பாலத்தையும் மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் ஆற்று வெள்ளத்தை கடந்து செல்வததை தடுக்கும் வகையில் தரைப்பாலங்கள் உள்ள இடத்தில் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி உத்தரவின் பேரில் தடுப்புகளை அமைத்து போக்கு வரத்தை தடை செய்தனர்.
இதனால் 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் போக்குவரத்து இன்றி துண்டிக்கப்பட்டது. இப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாற்றுப் பாதையில் சுற்றிக் கொண்டு பெரியபாளையம் சென்று அங்கிருந்து மற்ற இடங்களுக்கு செல்கிறார்கள். ஏற்கனவே ரூ.20 கோடி செலவில் புதுப்பாளையம்-அஞ்சாத்தம்மன் கோவில் இடையே உயர் மட்ட மேம்பாலம் கட்ட இந்த மாதம் அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மேம்பால பணியை மழை காலம் முடிந்ததும் தொடங்கி விரைவில் முடிக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.