தமிழ்நாடு

கொள்ளை நடந்த கடையில் போலீசார் விசாரணை நடத்தினர்.


திருக்கோவிலூரில் நகைக்கடையை உடைத்து 50 பவுன் நகை-வெள்ளிப் பொருட்கள் கொள்ளை

Published On 2022-09-16 13:03 IST   |   Update On 2022-09-16 13:03:00 IST
  • நகைக்கடையில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகை மற்றும் 50 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை கும்பல் திருடி சென்றனர்.
  • கடையின் உள்ளே இருந்த லாக்கரை கொள்ளை கும்பலால் உடைக்க முடியவில்லை.

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் வடக்கு தெருவில் நகைக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளது.

இந்த வடக்கு தெருவில் அதே பகுதியைச் சேர்ந்த நித்திஷ் லோகேஷ் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் கடையில் வேலை முடித்துவிட்டு பணியாளர்கள் நகை கடையை மூடி விட்டு சென்றனர்.

நள்ளிரவு சமயம் அங்கு வந்த மர்ம கும்பல் நகைக்கடையில் 3-வது மாடியில் ஏறி கண்காணிப்பு கேமரா மற்றும் கடைக்கு வரும் மின்சார இணைப்பை துண்டித்து விட்டனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த 3சிலிண்டர்கள் மூலம் நகைக்கடையில் இருந்த இரும்பு கதவை வெல்டிங் முறையில் துளையிட்டு உள்ளே நுழைந்தனர். நூல் அளவும் வெளியில் தெரியாத வண்ணம் நூதன முறையில் செயல்பட்டு கடையின் உள்ளே புகுந்தனர்.

கடையின் உள்ளே இருந்த லாக்கரை அவர்களால் உடைக்க முடியவில்லை. இதனால் நகைக்கடையில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகை மற்றும் 50 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை கும்பல் திருடி சென்றனர். இன்று காலை கடை பணியாளர்கள் கடையை திறந்த போது கடையில் கொள்ளை போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த திருக்கோவிலூர் டி.எஸ்.பி. பழனி, இன்ஸ்பெக்டர் பாபு, சப் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை போன நகைக்கடையை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டுள்ளது.

தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து வருகின்றனர். மோப்பநாய் கொள்ளை நடந்த இடத்திலிருந்து மோப்பம் பிடித்து சிறிது நேரம் ஓடி நின்றது யாரையும் பிடிக்கவில்லை. இந்த கொள்ளைக்கு பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் புதிய பொருட்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. திருக்கோவிலூரில் பொதுமக்களின் நடமாட்டம் மிகுந்த வடக்கு தெருவில் உள்ள நகைக்கடையில் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News