மறைந்து நாளையுடன் 30 நாட்கள் ஆகிறது- விஜயகாந்த் சமாதியில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் அஞ்சலி
- அஞ்சலி செலுத்த வருபவர்கள் பசியோடு செல்லக்கூடாது என்பதற்காக தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
- தன்னை பார்க்க வருபவர்களிடம் சாப்பிட்டீர்களா? என்று கேட்பது விஜயகாந்தின் பழக்கம்.
சென்னை:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 28-ந்தேதி காலமானார். உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து ஏராளமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர் விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அன்று முதல் தினமும் விஜயகாந்த் சமாதியில் தே.மு.தி.க.வினரும், பொது மக்களும் திரண்டு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இதனால் தே.மு.தி.க. அலுவலக பகுதியில் போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் மற்றும் தே.மு.தி.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் விஜயகாந்த் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
விஜயகாந்த் மரணம் அடைந்து நாளையுடன் ஒரு மாதம் ஆகப்போகிறது. நேற்று விஜயகாந்த் சமாதியில் அதிகம் பேர் திரண்டு அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் 50 ஆயிரம் பேர் விஜயகாந்த் சமாதியில் அஞ்சலி செலுத்தி இருப்பதாக தே.மு.தி.க. மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அஞ்சலி செலுத்த வருபவர்கள் பசியோடு செல்லக்கூடாது என்பதற்காக தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வழங்கப்படும் அன்னதானத்தை பலரும் சாப்பிட்டு வருகிறார்கள்.
தன்னை பார்க்க வருபவர்களிடம் சாப்பிட்டீர்களா? என்று கேட்பது விஜயகாந்தின் பழக்கம். முதலில் சாப்பிட்டு விட்டு வாருங்கள் அப்புறம் பேசலாம் என்று விஜயகாந்த் பசியாற்றி வந்துள்ளார். அவரது கொள்கைபடியே தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருவதாக தே.மு.தி.க.வினர் தெரிவித்துள்ளனர்.