தமிழ்நாடு

குப்பை கொட்ட இடம் இல்லை

Published On 2023-12-12 12:38 IST   |   Update On 2023-12-12 12:38:00 IST
  • வெள்ளம் வடிந்த நிலையில் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் தற்போது நடைபெற்று வருகின்றன.
  • குப்பைகளை சேகரித்து செல்லும் லாரிகளும் கொட்ட முடியாமல் பல மணி நேரம் காத்து நிற்கின்றன.

சென்னை:

சென்னையை புரட்டிப் போட்ட புயல் மழையால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். வீடுகளில் புகுந்த வெள்ளத்தால் பொருட்கள் சேதம் அடைந்தன. கார், இரு சக்கர வாகனங்கள், மின் சாதனங்கள், சேர், டேபிள், படுக்கைகள் சேதம் அடைந்தன. கீழ் தளத்தில் குடியிருந்தவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர்.

வெள்ளம் வடிந்த நிலையில் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் தற்போது நடைபெற்று வருகின்றன. மழை ஓய்ந்து வெள்ளம் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு வந்தாலும் பாதிப் பில் இருந்து விடுபடவில்லை.

வெள்ளத்தில் இருந்து மீண்ட மக்கள் வீடுகளை சுத்தம் செய்து வருகின்றனர். சாக்கடை கழிவு நீர் வீட்டிற்குள் புகுந்ததால் துர்நாற்றம் வீசுகிறது. ஆனால் சுத்தம் செய்வது பெரிய சுமையாக உள்ளது.

மேலும் வீட்டில் சேதம் அடைந்த பொருட்களை வெளியேற்றி வருகிறார்கள். வீட்டு உபயோக பொருட்கள், இரு சக்கர வாகன பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை பெருமளவில் சேதம் அடைந்துள்ளன.

இதனால் குப்பை கழிவுகள் வழக்கத்தை விட அதிகமாக தெருக்களிலும், சாலைகளிலும் குவிகிறது. சென்னையில் வழக்கமாக தினமும் 6 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படும். ஆனால் வெள்ள பாதிப்புக்கு பிறகு 9 ஆயிரம் மெட்ரிக் டன்னாக அதிக ரித்துள்ளது.

எங்கு பார்த்தாலும் குப்பைகள் மலை போல் தேங்கி கிடக்கின்றன. மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அள்ள அள்ள மேலும் குவிகிறது.


மழை வெள்ளத்திற்கு பிறகு 50 சதவீத குப்பை கழிவுகள் தினமும் கூடுதலாக வருகின்றன. இதனை அகற்ற ஊழியர்கள் முழு வீச்சில் இரவு-பகலாக ஈடுபட்டாலும் கூட குப்பைகள் மலை போல் தேங்குகின்றன.

பிற மாவட்டங்களில் இருந்து வந்த ஊழியர்களை பயன்படுத்தி விரைவாக எடுத்தாலும் கூட தொடர்ந்து ஒரு புறம் குப்பைகள் குவிகிறது. மேலும் குப்பைகளை கிடங்குகளில் கொட்டுவதற்கு இடம் இல்லை.

நகரின் முக்கிய குப்பை கிடங்குகள் அனைத்தும் நிரம்பி விட்டன. குப்பைகளை சேகரித்து செல்லும் லாரிகளும் கொட்ட முடியாமல் பல மணி நேரம் காத்து நிற்கின்றன.

சென்னையில் உள்ள பெரும்பாலான தெருக்கள், சாலைகளில் குப்பைகள் நிரம்பி வழிகின்றன. சூளைமேடு, ராயபுரம், தண்டையார்பேட்டை, தி.நகர், அரும்பாக்கம் போன்ற பல குடியிருப்பு பகுதிகளில் சாலையில் குப்பை அழுகி கிடக்கிறது. வீடுகளில், தெரு வீதிகளிலும் முறையாக குப்பை எடுக்காததால் கண்ட இடங்களில் குப்பைகளை மக்கள் கொட்டி வருகின்றனர்.

குப்பைகளை மாற்றம் செய்யக்கூடிய நிலையங்களில் தேங்கி கிடப்பதால் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.

ஒவ்வொரு பகுதியிலும் குப்பைகள் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் தேங்கி வருவதால் அகற்றுவதில் சுணக்கம் ஏற்படுகிறது.

புளியந்தோப்பில் உள்ள குப்பை மாற்றும் மையங்களில் குப்பை வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன. கொட்டுவதற்கு இடம் இல்லாததால் தாமதம் ஆகிறது.

மேலும் திருமண மண்டபங்கள், திரையரங்குகள், மால்கள் போன்றவற்றின் இடங்களில் உருவாகும் மொத்த கழிவுகளை சேகரிக்க ஊழியர்கள் பணிக்கு வராததால் அவர்கள் தங்கள் கழிவுகளை சாலைகளில் கொட்டி வருகிறார்கள்.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "திடக்கழிவுகளை பிரிப்பது அல்லது பதப்படுத்துவது பற்றி மாநகராட்சி தற்போது சிந்திக்கவில்லை. சாலைகளில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கு முன்னுரிமை கொடுத்துள்ளோம். மற்ற மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரம் பணியாளர்களை இந்த பணியில் கூடுதலாக நியமித்துள்ளோம். சாலையில் உள்ள அனைத்து கழிவுகளையும் நாங்கள் சேகரித்தவுடன் சில கழிவுகளை மறுசுழற்சிக்காக பொருள் மீட்பு மையத்திற்கு அனுப்புவோம்" என்றார்.

Tags:    

Similar News