தமிழ்நாடு

கராத்தே தெரிந்தவர்களுக்கு தொண்டர் அணியில் முன்னுரிமை- தி.மு.க. மேலிடம் அறிவுறுத்தல்

Published On 2023-01-04 05:27 GMT   |   Update On 2023-01-04 05:27 GMT
  • ஒவ்வொரு அணியிலும் பதவி பெறுபவர்களுக்கு அதன் பணிகளுக்கு ஏற்ப தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் மூத்த நிர்வாகி தெரிவித்தார்.
  • பொங்கல் முடிந்ததும் 23 அணிகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்.

சென்னை:

தி.மு.க.வில் உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அதன் துணை அமைப்புகளான இளைஞரணி, மாணவரணி, தொழிலாளர் அணி, தொண்டர் அணி, விவசாய அணி, தகவல் தொழில் நுட்ப அணி, பொறியாளர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி உள்பட 23 அணிகளுக்கு மாநில அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

அதன்படி தி.மு.க. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் 2-வது முறையாக நியமிக்கப்பட்டார். இதே போல் ஒவ்வொரு அணிக்கும் மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

இதன் அடுத்த கட்டமாக 23 அணிகளுக்கும் மாவட்ட அளவில் அமைப்பாளர், துணை அமைப்பாளர் மற்றும் நிர்வாகிகளை நியமிக்க தலைமை உத்தரவிட்டு உள்ளது.

இதற்காக ஒவ்வொரு அணியிலும் பதவி பெற விரும்புபவர்கள் மாவட்டச் செயலாளர்களிடம் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர்.

இதில் இளைஞரணி, தகவல் தொழில் நுட்ப அணிகளின் அமைப்பாளர் பதவிக்கு பட்டப்படிப்பு முடித்தவர்களுக்குதான் முன்னுரிமை வழங்கப்படும் என மாவட்டச் செயலாளர்கள் உறுதிபட தெரிவித்து விட்டனர்.

அதே போல் ஒரு பதவிக்கு மட்டும் விண்ணப்பிக்காமல் மற்றொரு பதவிக்கும் விண்ணப்பித்தால்தான் ஏதாவது ஒரு பொறுப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

தி.மு.க.வில் இளைஞரணி எவ்வளவு முக்கியமாக கருதப்படுகிறதோ அதே போல் இப்போது தொண்டரணி பதவிக்கும் சில விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.

அதில் முக்கியமாக தொண்டரணியில் பதவி கேட்பவர்களுக்கு உடற்கட்டு (பாடி பிட்னஸ்) முக்கிய அம்சமாக வைக்கப்பட்டுள்ளது. கராத்தே தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை அடையாளம் தெரிந்திருக்க வேண்டும்.

கூட்டத்தை ஒழுங்குப்படுத்துவதிலும், தலைவர்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுப்பதிலும் தொண்டரணி பங்கு முக்கியம் என்பதால் பொறுமை மிக அவசியம் என்றும் கோபக்காரர்களுக்கு தொண்டரணியில் இடம் கிடையாது என்றும் முக்கிய அம்சமாக சொல்லப்பட்டுள்ளது.

இதே போல் ஒவ்வொரு அணியிலும் பதவி பெறுபவர்களுக்கு அதன் பணிகளுக்கு ஏற்ப தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் மூத்த நிர்வாகி தெரிவித்தார்.

பொங்கல் முடிந்ததும் 23 அணிகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் இந்த மாத இறுதிக்குள் அனைத்து பதவிகளும் நிரப்பப்பட்டு விடும் என்றும் மாவட்டச் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்

Similar News