பூண்டி ஏரியில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்
- பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரி நீர் மதகுகள் வழியாக திறந்துவிடப்பட்டது.
- மழை முழுவதுமாக நின்று விட்டதால் ஏரிக்கு நீர்வரத்தும் குறைந்தது.
திருவள்ளூர்:
சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம். கடந்த ஆண்டு பருவமழை காரணமாக பலத்த மழை பெய்ததால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமானது. இதனால் ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த செப்டம்பர் மாதம் 25-ந் தேதி முதல் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரி நீர் மதகுகள் வழியாக திறந்துவிடப்பட்டது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 மில்லியன் கன அடி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
இன்று காலை நிலவரப்படி நீர் இருப்பு 3064 மில்லியன் கன அடியாகவும் நீர்மட்டம் 34.75 அடியாகவும் உள்ளது. தற்போது மழை முழுவதுமாக நின்று விட்டதால் ஏரிக்கு நீர்வரத்தும் குறைந்தது. இதன் காரணமாக ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளது.