தமிழ்நாடு

சென்னிமலை அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி படுகொலை

Published On 2023-09-09 11:13 IST   |   Update On 2023-09-09 11:13:00 IST
  • போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் நகை, பணத்திற்காக கொலை நடந்தது தெரிய வந்தது.
  • பீரோவில் எவ்வளவு நகைகள், எவ்வளவு பணம் இருந்தது என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

சென்னிமலை:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த முருங்கதொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டன்குட்டை அருகே கரியங்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (85). விவசாயி. இவரது மனைவி சாமியாத்தாள் (80). இவர்களுக்கு வசந்தி, கவிதா, கலையரசி என திருமணமான 3 மகள்கள் உள்ளனர். அனைவரும் தனியாக வசித்து வருகிறார்கள்.

முத்துசாமியும், சாமியாத்தாளும் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தனர். நேற்று இரவு முத்துசாமியும், சாமியாத்தாளும் வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கினர். இந்நிலையில் நள்ளிரவில் முத்துசாமியின் வீட்டின் கதவை கம்பியால் நெம்பி, கதவை திறந்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் தூங்கி கொண்டிருந்த முத்துசாமியை இரும்பு கம்பியால் தாக்கியும், அரிவாளால் வெட்டினர்.

சத்தம் கேட்டு எழுந்த சாமியாத்தாளையும் மர்மநபர்கள் இரும்பு ராடு மற்றும் அரிவாளால் வெட்டினர். இதில் முத்துசாமியும், சாமியாத்தாளும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இந்நிலையில் முத்துசாமியின் மகள் கலையரசியின் மகனான அஜித் (23) தாத்தா, பாட்டியை பார்ப்பதற்காக இன்று காலை வீட்டிற்கு வந்தார். வீட்டின் கதவு திறந்திருந்ததால் வீட்டிற்குள் அஜித் சென்றார். அப்போது வீட்டில் ரத்த வெள்ளத்தில் தாத்தாவும், பாட்டியும் கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், டி.எஸ்.பி. ஜெயபாலு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முத்துசாமி, சாமியாத்தாள் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது அருகில் உள்ள வாழைத்தோட்டம் மற்றும் அருகே உள்ள சாலையில் சிறு தூரம் ஓடி நின்றது. யாரையும் கவி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலை சம்பவம் நடந்த வீட்டில் பதிவான மர்மநபர்களின் கைரேகைகள், அவர்கள் விட்டு சென்ற தடயங்களை கைப்பற்றினர்.

சென்னிமலையில் வயதான தம்பதி வீடு புகுந்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாக வந்த தகவலின்பேரில் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் இன்று காலை கொலை நடந்த வீட்டிற்கு வந்து நேரில் விசாரணை நடத்தினார். மேலும், டி.எஸ்.பி. ஜெயபாலு, இன்ஸ்பெக்டர் சரவணனிடம் கைப்பற்றப்பட்ட தடயங்கள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து கொலையாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் நகை, பணத்திற்காக இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. முதற்கட்டமாக மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகை, அவர் கையில் அணிந்திருந்த மோதிரம் வளையல்கள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது. அதே நேரம் வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் எவ்வளவு நகைகள், எவ்வளவு பணம் இருந்தது என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையான முத்துசாமி அவரது வீட்டில் பாதுகாப்பிற்காக செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்த நாய் கடந்த ஒரு வாரத்திற்கு முன் திடீரென மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதனால் முத்துசாமியின் வீட்டில் கொள்ளையடிக்க மர்மநபர்கள் திட்டம் திட்டி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே முத்துசாமியின் வீட்டில் வளா்த்த நாய்க்கு விஷம் தடவிய பொருளை சாப்பிட கொடுத்து கொலை செய்துள்ளனர். பின்னர் மர்மநபர்கள் நேற்று இரவு முத்துசாமி வீட்டிற்குள் நுழைந்து முத்துசாமியையும், சாமியாத்தாளையும் கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதேபோல் கடந்த 16 மாதங்களுக்கு முன்பு குட்டைக்காடு என்ற பகுதியில் வயதான தம்பதியர்கள் தனியாக வசித்து வந்த நிலையில் மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து முதியவரை வெட்டி படுகொலை செய்து பணம் நகையை கொள்ளையடித்து சென்றனர். மேலும் மூதாட்டிக்கும் வெட்டுக்காயம் விழுந்தது. அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். இந்த சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News