"சேரி" விவகாரம்- குஷ்புவுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவு
- தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. அடுத்து 3-வது பெரிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது.
- சில இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தாலும் கூட அதை மாநகராட்சி உடனடியாக அப்புறப்படுத்தி வருகிறது.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
5 மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது. குறிப்பாக 4 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும். பாராளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள தி.மு.க. கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றி பெறும். தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளையும் தி.மு.க கூட்டணி கைப்பற்றும்.
நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாதம் ஆயிரம் ரூபாய் போன்ற நல்ல திட்டங்களை வழங்கி உள்ளார். இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பெண்கள், தாய்மார்கள் முதலமைச்சர் பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர்.
சென்னையில் தற்போது மிக அதிக அளவில் மழை பெய்துள்ளது. சில இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தாலும் கூட அதை மாநகராட்சி உடனடியாக அப்புறப்படுத்தி வருகிறது. நிவாரண பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. அடுத்து 3-வது பெரிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. இன்றும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மீது மக்கள் பற்று வைத்து ஆதரவு தந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகை குஷ்பு சேரி சம்பந்தமாக பேசியது குறித்து உங்களது கருத்து என்ன என்று கேட்டதற்கு இளங்கோவன் கூறும்போது,
நான் அதைப்பற்றி ஒண்ணும் கூற விரும்பவில்லை. எனக்கு ஒன்றும் அதில் தப்பாக இருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் எனக்கு அவருடைய பேச்சின் முழு விவரம் தெரியவில்லை என்று பதிலளித்தார்.
நடிகை குஷ்பு சமீபத்தில் சேரி குறித்து கூறிய கருத்து சர்ச்சையானது. காங்கிரஸ் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை குஷ்பு வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ. கூறிய இந்த கருத்து இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.