தமிழ்நாடு

மண்சரிவு மற்றும் மரங்களை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றப்பட்டது


ஊட்டி, பந்தலூரில் கனமழை: 3 வீடுகள் இடிந்தன

Published On 2022-07-11 10:49 IST   |   Update On 2022-07-11 10:49:00 IST
  • நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது.
  • ஊட்டி நகர் பகுதியில் பெய்த மழைக்கு பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் ஊட்டி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

ஊட்டி நகர் பகுதியில் பெய்த மழைக்கு பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. ஊட்டி-கூடலூர் சாலையில் காமராஜர் சாகர் அணை அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் கிளன்மார்கன் சாலை, பார்சன்ஸ் வேலி சாலைகளிலும் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. ஊட்டி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களிலும் பலத்த மழை கொட்டியது. மழைக்கு கூடலூர்-ஊட்டி செல்லும் சாலையில் பைக்காரா பகுதியில் மரம் சரிந்து விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சுல்தான் பத்தேரியில் 4 மைல் பகுதியில் சாைலயோரம் நின்றிருந்த மூங்கில்கள் சாலையில் விழுந்தன. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் 1 1/2 மணி நேரம் போராடி மரங்களை அகற்றினர்.

கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் அருகே உள்ள ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இதில் பள்ளிக்கூட கட்டிட சுவரும் இடிந்து விழுந்தது. மேலும் மின்வினியோகம் தடை பட்டதால் மக்கள் பாதிப்படைந்தனர்.

பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு, அய்யன்கொல்லி அருகே மினிமோகண்ணன் என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள மண்சுவர் இடிந்து விழுந்தது. எருமாடு அருகே ஓனிமூலாவில் ராஜேந்திரன் மற்றும் சேரம்பாடி அருகே கோரஞ்சால் அண்ணா நகரில் ஆராய்வீரையா என்பவர்களின் வீடுகளும் இடிந்து விழுந்தது.

பந்தலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக சாலைகளிலும், கால்வாய்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

பாடந்தொரை பகுதியில் சாலையோரம் ஏற்பட்ட மண் சரிவால் மூங்கில் புதா்கள் உள்பட மரங்கள் சாலையில் சாய்ந்தன.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் இடிபாடுகளை அகற்றி சாலையை சீரமைத்தனா்.

Tags:    

Similar News