தொடர் மழை காரணமாக மூல வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
- மழை பெய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர்.
- முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 130.40 அடியாக உள்ளது.
வருசநாடு:
பருவமழை தாமதமானதால் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான மூலவைகையாற்றில் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்பட்டது. மேலும் பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் 56.10 அடியாக சரிந்துள்ளது. எனவே மழை பெய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர்.
மேலும் கடும் வெயில் வாட்டி வதைத்ததால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுமோ என பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலையில் கடமலை மயிலை ஒன்றிய பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கனமழை பெய்தது.
அரசரடி, வெள்ளிமலை, வருசநாடு, கண்டமனூர், மயிலாடும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழையால் மூலவைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வைகை அணைக்கு 242 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 869 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 130.40 அடியாக உள்ளது. 116 கனஅடிநீர் வருகிறது. 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45.70 அடி, 125 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.67 அடியாக உள்ளது. 8 கனஅடிநீர் வருகிறது. 6 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 2, சோத்துப்பாறை 2, உத்தமபாளையம் 3, வைகை அணை 1.6, அரண்மனைப்புதூர் 1.4, ஆண்டிபட்டி 7 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.