தமிழ்நாடு

கோயம்பேடு மார்க்கெட்டில் 7 ஏக்கரில் பிரமாண்ட பூங்கா- சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டம்

Published On 2023-05-08 14:18 IST   |   Update On 2023-05-08 15:40:00 IST
  • சென்னை கோயம்பேடு மார்க்கெட் 21 ஏக்கரில் கடந்த1996-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
  • கோயம்பேடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசித்து வரும் குடியிருப்புவாசிகள் மற்றும் பொதுமக்கள் பயன் பெறுவார்கள்.

போரூர்:

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 21 ஏக்கரில் கடந்த1996-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

இங்கு ஏறத்தாழ 4 ஆயிரம் கடைகளில் காய்கறி, பழம், பூ மற்றும் மளிகை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது. இந்த மார்க்கெட் வளாகத்தை நவீனப்படுத்த தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

இதையடுத்து ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டு அவர்கள் கொடுக்கும் அறிக்கையின்படி கோயம்பேடு சந்தை வளாகத்தில் அடிப்படை பிரச்சினைகளான மழைநீர் வடிகால், சாலைகள் அமைப்பது, கழிவறை, மின் விளக்கு, கணினி நுழைவு வாயில், கடைகளுக்கு பின்புறம் உள்ள சரீவீஸ் தெருவில் கல் பதிப்பது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், செயற்கை நீருற்று உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை மேலும் அழகுபடுத்திடும் வகையில் பூ மார்க்கெட் வளாகத்தில் 7 ஏக்கரில் பிரம்மாண்டமான பூங்கா ஒன்றை அமைத்திட சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டு உள்ளது.

இதன் மூலம் கோயம்பேடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசித்து வரும் குடியிருப்புவாசிகள் மற்றும் பொதுமக்கள் பயன் பெறுவார்கள்.

நடைபயிற்சி பாதை, ஜாக்கிங் பாதை, குழந்தைகள் விளையாட இடம், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், செடிகள், மரங்கள், செயற்கை தோட்டங்கள் என அனைத்து வசதிகளுடன் இந்த பூங்காவை நவீனமான முறையில் அமைக்க சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டு அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் தொழிலாளர்கள் வசதிக்காக அவசர சிகிச்சை பிரிவு மற்றும் படுக்கை வசதிகளுடன் கூடிய ஆஸ்பத்திரி ஒன்றை அமைத்திடவும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

Tags:    

Similar News