மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்தபடி ராக்கெட் பட்டாசு வெடித்த வாலிபர்
- மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்வதே குற்றம் ஆகும்.
- வாகன பதிவு எண்ணை வைத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
சென்னை:
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்காக தற்போது பட்டாசு விற்பனை மும்முரமாக நடக்கிறது. சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் ஏராளமான பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கடைகளில் பட்டாசு விற்பனை களை கட்ட தொடங்கியுள்ளது.
சிறுவர்கள், இளைஞர்கள் இப்போதே பட்டாசு கடைகளில் பட்டாசு வாங்கி ஆர்வமாக வெடிக்க தொடங்கியுள்ளனர். ஆனால் சிலர் மிகவும் ஆபத்தான வகையில் பட்டாசு வெடிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்தபடி ராக்கெட் பட்டாசு வெடித்து ஆபத்தான செயலில் ஈடுபட்டார். அந்த வாலிபர் தனது மோட்டார்சைக்கிளின் முன் பகுதியில் ராக்கெட் பட்டாசை வைக்கிறார். பின்னர் மோட்டார் சைக்கிளில் வீலிங் சாகசம் செய்தபடி ராக்கெட் பட்டாசை பற்ற வைக்கிறார். அந்த பட்டாசு சீறிப்பாய்ந்த படி பறந்து சென்று வெடிக்கிறது. இப்படி பட்டாசு வெடிக்கும் போது அந்த வழியாக வந்த வாகனங்களில் செல்பவர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்கிறார்கள்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்வதே குற்றம் ஆகும். ஆனால் அவர் வீலிங் செய்தபடி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ராக்கெட் பட்டாசை வெடிக்கும் காட்சியை பார்த்த பலரும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது வாகன பதிவு எண்ணை வைத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.