தமிழ்நாடு

4 நாட்களாக ஒரே இடத்தில் மேட்டுப்பாளையத்தில் நின்ற மர்ம கார்- பொதுமக்கள் பீதி

Published On 2022-10-26 14:04 IST   |   Update On 2022-10-26 14:04:00 IST
  • கோவையில் கார் வெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • கார் கண்ணாடியில் ஸ்டிக்கர் கருப்பு கலரில் ஒட்டப்பட்டு இருந்ததால் உள்ளே என்ன உள்ளது என்பது தெரியவில்லை.

கோவை:

கோவையில் கார் வெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி ரோட்டில் உள்ள சாமில் முன்பு கடந்த 4 நாட்களாக சென்னை பதிவு எண் கொண்ட கார் எடுக்காமல் நின்று கொண்டு இருந்தது.

இதனை பார்த்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். கார் கண்ணாடியில் ஸ்டிக்கர் கருப்பு கலரில் ஒட்டப்பட்டு இருந்ததால் உள்ளே என்ன உள்ளது என்பது தெரியவில்லை.

இதனை தொடர்ந்து போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் மெட்டல் டிடக்டர் உதவியுடன் சோதனை செய்தனர். அப்போது காருக்குள் எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. கார் கண்ணாடியை உடைத்து கதவை திறந்து பார்த்தனர்.

பின்னர் காரில் ஒட்டப்பட்டு இருந்த ஒர்க்‌ஷாப் முகவரிக்கு போலீசார் தொடர்பு கொண்டனர். அப்போது அந்த கார் மேட்டுப்பாளையம் காமராஜர் நகரை சேர்ந்த காய்கறி வியாபாரிக்கு சொந்தமானது என தெரிய வந்தது. பின்னர் கார் உரிமையாளரிடம் போலீசார் தொடர்பு கொண்டு பேசினர்.

அப்போது காரின் சக்கரம் இயங்காததாலும், தீபாவளி பண்டிகை என்பதால் மெக்கானிக் யாரும் கிடைக்காததால் நிறுத்தி உள்ளதாக தெரிவித்தார். பின்னர் போலீசார் காரை அப்புறப்படுத்தினர்.

Similar News