தமிழ்நாடு

என்.எல்.சி. 2-வது சுரங்கத்திற்கு ஒப்பந்த தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து- 37 பேர் படுகாயம்

Published On 2023-08-16 08:27 GMT   |   Update On 2023-08-16 08:27 GMT
  • சுரங்கத்தின் அருேக செல்லும் போது வாகனத்தில் பழுது ஏற்பட்டதாக தெரிகிறது.
  • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பிக்அப் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நெய்வேலி:

என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களை நுழைவு வாயிலில் இருந்து ஏற்றிச் செல்ல வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள், நிரந்தர தொழிலாளர்கள், பயிற்சி மாணவர்களும் பணிக்கு சென்று திரும்புவது வழக்கம்.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு 37 பேரை நுழைவு வாயிலில் இருந்து ஏற்றிக்கொண்டு 2-வது சுரங்கத்திற்கு பிக்அப் வாகனம் புறப்பட்டது. சுரங்கத்தின் அருேக செல்லும் போது வாகனத்தில் பழுது ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பிக்அப் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வாகனத்தில் பயணம் செய்த ஊழியர்களின் அலறல் சத்தம் கேட்டு மற்ற தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர்.

அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒப்பந்த தொழிலாளர்களான கந்தவேல் (வயது 47), கலியமூர்த்தி (40), பயிற்சி மாணவர் கீர்த்திவாசன் (18) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இந்த 3 பேரும் மேல் சிகிச்சைக்காக புதுவை காலாப்பட்டில் உள்ள பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது விபத்து குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்.எல்.சி.க்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது. இதற்கு வாகனப்பழுது காரணமாக கூறப்படுகிறது. எனவே, தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை சரி செய்ய வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News