தமிழ்நாடு

மதுரையில் அ.தி.மு.க. மாநாடு நடத்தப்படும் 20-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தர்மயுத்தம்?

Published On 2023-08-05 11:01 IST   |   Update On 2023-08-05 11:01:00 IST
  • டெல்லியில் சமீபத்தில் நடந்த பாரதிய ஜனதா கூட்டணி கூட்டத்துக்கு ஓ.பி.எஸ். அழைக்கப்படவில்லை.
  • ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வில் சசிகலாவின் ஆதிக்கம் ஏற்பட்ட போது ஓ.பி.எஸ்., ஜெயலலிதா சமாதி முன்பு அமர்ந்து தர்ம யுத்தத்தில் ஈடுபட்டார்.

சென்னை:

அ.தி.மு.க. தலைமை பதவியை பிடிப்பது யார்? என்கிற போட்டியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதை அடுத்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் மதுரையில் வருகிற 20-ந்தேதி பிரமாண்ட மாநாட்டுக்கு ஏற்பாடு செய்து உள்ளார்.

இந்த மாநாட்டில் 5 லட்சம் தொண்டர்களை திரட்ட கட்சியினர் தயாராகி வருகிறார்கள். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த மாநாட்டை நடத்தும் எடப்பாடி பழனிசாமி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வியூகம் வகுத்து காய் நகர்த்தி வருகிறார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி நடத்தும் இந்த மாநாட்டை திசை திருப்பும் நோக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தர்மயுத்தத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரனுடன் கைகோர்த்துக் கொண்டு அரசியல் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். பாராளுமன்ற தேர்தலை இருவரும் கூட்டாக சந்திக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.

அதே நேரத்தில் டெல்லியில் சமீபத்தில் நடந்த பாரதிய ஜனதா கூட்டணி கூட்டத்துக்கு ஓ.பி.எஸ். அழைக்கப்படவில்லை. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் தங்களின் எதிர்காலம் என்ன? என்கிற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது.

இந்த நிலையில்தான் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. மாநாடு நடைபெறும் நாளான வருகிற 20-ந்தேதி அன்று கொடநாடு எஸ்டேட் முன்பு அமர்ந்து தர்ம யுத்தத்தில் ஈடுபட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக நீலகிரி மாவட்டத்தில் தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வில் சசிகலாவின் ஆதிக்கம் ஏற்பட்ட போது ஓ.பி.எஸ்., ஜெயலலிதா சமாதி முன்பு அமர்ந்து தர்ம யுத்தத்தில் ஈடுபட்டார்.

ஓ.பி.எஸ்.சின் இந்த தர்மயுத்தம் அவரது அரசியல் பயணத்தில் வெற்றிக்கு வழிவகுத்தது என்றே கூறலாம். இதன் பின்னர் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட்ட ஓ.பி.எஸ். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற அந்தஸ்தையும் எட்டிப் பிடித்தார்.

ஆனால் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு அதிகரித்ததை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு சரிந்து தற்போது மீண்டும் தர்ம யுத்தத்தை அவர் கையில் எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கொடநாடு தர்ம யுத்தம் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எப்படி கைகொடுக்கப் போகிறது? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Tags:    

Similar News