கோவையில் விடாமல் துரத்திய ஆன்லைன் மோசடி கும்பல்- வாலிபரின் படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் பறிக்க முயற்சி
- வாலிபரின் புகைப்படத்தை பார்த்தவர்களில் 2 பேர் மட்டும் புகைப்படம் வந்த மோசடி கும்பலின் நம்பரை தொடர்பு கொண்டு, அவருக்கு என்னவாயிற்று என கேட்டுள்ளனர்.
- அவர்களிடம் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஏமாற்றி தலா ரூ.5 ஆயிரம் வீதம் 10 ஆயிரம் ரூபாயை பறித்துள்ளனர்.
கோவை:
நாகரீக கால வளர்ச்சிக்கு ஏற்ப மக்களும் தங்களை மாற்றி கொள்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் வங்கி பணப்பரிமாற்றம், பொருட்கள் வாங்குவது, போன், டி.வி. வாங்குவது, அதற்கு ரீசார்ஜ் செய்வது என பல விஷயங்களையும் நாம் ஆன்லைன் மூலமே செய்து கொள்கிறோம்.
இப்படி பல விஷயங்களில் மக்களுக்கு நன்மை தருவதாக அமைந்திருக்கும் ஆன்லைன்களில் பல்வேறு விதமான மோசடிகளும் அதிகமாக நடைபெற்று வருகிறது. வங்கியில் இருந்து பேசுகிறோம் உங்கள் ஓ.டி.பி. எண்ணை தெரிவியுங்கள் என்று கூறி ஏமாற்றி பணம் பறிக்கின்றனர். போட்டோக்களை மார்பிங் செய்து பணம் பறிப்பது, பேஸ்புக்கில் போலி கணக்கை உருவாக்கி பணம் பறிப்பது என புதிது, புதிதாக தினம் ஒரு மோசடி நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்த மாதிரியான சைபர் குற்றங்களில் இருந்து மக்கள் தப்பித்து கொள்வதற்கு சைபர் கிரைம் போலீசாரும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இருந்தாலும் மோசடிகள் தொடர்ந்த வண்ணம் தான் உள்ளது. சமீபத்தில் கூட உங்கள் செல்போனில் உள்ள 4 ஜியை 5 ஜியாக மாற்றி தருகிறோம் என்று போன் செய்து பணம் பறிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
மேலும் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலாக உங்கள் தொழிலுக்கு தேவையான பொருட்கள் தங்களிடம் இருக்கிறது என கூறி ஒரு கும்பல் கோவை வாலிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவையை சேர்ந்தவர் 33 வயது வாலிபர். இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் ஒரு போன் கால் வந்தது. அதனை எடுத்து பேசியபோது, எதிர் முனையில் பேசிய நபர், நீங்கள் செய்து வரும் தொழிலுக்கு சம்பந்தமான பொருட்கள் தங்களிடம் இருப்பதாகவும், உங்களுக்கு பிடித்தால் அதற்கான தொகையை பேசி கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
அதற்கு வாலிபரும் பார்த்து விட்டு சொல்கிறேன் என கூறியதாக தெரிகிறது. ஒரு நாள் வாலிபர் வேலை முடிந்து தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு முதலில் வந்த நம்பரில் இருந்து வீடியோ கால் வந்தது. அவரும் போனை எடுத்துள்ளார். அப்போது அவர் முன்பு இளம்பெண் ஒருவர் ஆபாசமாக நிற்பது போன்று இருந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் போனை துண்டித்து விட்டார்.
சில நிமிடங்களில் அவரது போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் வாலிபரின் படம் அரை நிர்வாணமாக இருப்பது போன்று மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் வந்திருந்தது. மேலும் இந்த போட்டோவை வேறு யாருக்கும் அனுப்ப வேண்டாம் என்றால் எங்களுக்கு ரூ.50 ஆயிரம் கொடு என மிரட்டியது. அப்போது தான் வாலிபருக்கு தன்னை மோசடி கும்பல் தொடர்பு கொண்டு பணம் பறிக்க முயல்வது தெரியவந்தது.
சுதாரித்து கொண்ட அந்த வாலிபர், அந்த புகைப்படம் என்னுடையது கிடையாது. நீங்கள் கேட்கும் பணத்தை நான் தர மாட்டேன். உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். அதனை தொடர்ந்து அந்த மர்மகும்பல் வாலிபரின் செல்போனுக்கு இன்னும் ஏராளமான புகைப்படங்களை மார்பிங் செய்து அனுப்பி உள்ளனர். மீண்டும் வாலிபரை தொடர்பு கொண்டு நாங்கள் கேட்கும் பணத்தை நீ தராவிட்டால் இந்த புகைப்படத்தை எல்லாம் உன்னுடைய உறவினர்களுக்கு அனுப்பி விடுவோம் எனவும் மிரட்டினர்.
ஆனால் வாலிபர் அந்த கும்பலின் எந்தவித பேச்சுக்கும் மசியவில்லை. முடியவே முடியாது என கூறி இணைப்பை துண்டித்தார். இந்த நிலையில் மர்மகும்பல், வாலிபரின் பேஸ்புக் ஐ.டி.யில் நுழைந்து அவர்களது உறவினர்கள், நண்பர்களின் மொபைல் எண்களை தேடி எடுத்துள்னர்.
பின்னர் அவர்களின் செல்போன்களுக்கு வாலிபர் ஆஸ்பத்திரியில் அடிபட்டு படுத்து கிடப்பது போன்ற புகைப்படத்தை அனுப்பி உள்ளனர். இதனை பார்த்ததும் அவரது நண்பர்கள் அவரை தொடர்பு கொண்டு நீ ஆஸ்பத்திரியில் இருப்பது போன்ற புகைப்படம் வந்துள்ளதே என கேட்டனர். வாலிபர், அது நான் இல்லை. நான் நன்றாக இருக்கிறேன். மோசடி கும்பல் என்னிடம் பணம் பறிக்க இப்படி செய்துள்ளது. நீங்கள் நம்பி எதுவும் அனுப்பி விட வேண்டாம் என கூறியுள்ளார்.
வாலிபரின் புகைப்படத்தை பார்த்தவர்களில் 2 பேர் மட்டும் புகைப்படம் வந்த மோசடி கும்பலின் நம்பரை தொடர்பு கொண்டு, அவருக்கு என்னவாயிற்று என கேட்டுள்ளனர். அவர்களிடம் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஏமாற்றி தலா ரூ.5 ஆயிரம் வீதம் 10 ஆயிரம் ரூபாயை பறித்துள்ளனர். மேலும் அவர்களுக்கும் வீடியோ கால் செய்து விட்டு 5 நொடிகளில் இணைப்பை துண்டித்தும் விட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த அந்த நபர்கள் வாலிபரை தொடர்பு கொண்டு கேட்டபோது தான் இந்த சம்பவங்கள் அவர்களுக்கும் தெரியவந்தது.
இதுகுறித்து அந்த வாலிபர் கூறுகையில், என்னிடம், அவர்கள் செய்து தொழில் சம்பந்தமான பொருட்கள் இருப்பதாக கூறியே தொடர்பு கொண்டனர். ஆனால் எனது புகைப்படங்களை மார்பிங் செய்து பணம் பறிக்க முயன்றது. ஆனால் கொடுக்க மறுத்து விட்டேன். இதனால் அந்த கும்பல் நான் ஆஸ்பத்திரியில் இருப்பது போன்று புகைப்படங்களை மார்பிங் செய்து எனக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பி பணம் பறித்துள்ளனர்.
இது தொடர்பாக நான் சைபர் கிரைம் போலீசாரை போனில் தொடர்பு கொண்டு, புகார் தெரிவித்தேன். போலீசார் இதுபோன்று தினமும் 30 முதல் 40 போன்கள் வருகிறது. முறையாக நேரில் வந்து புகார் கொடுங்கள் என்றனர். நான் வேண்டாம் என்றேன். உடனே போலீசார் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் ரிப்போர்ட் பிளாக் என ஒன்று இருக்கும். அதில் போய் புகார் தெரிவித்தால். மறு நிமிடமே அந்த நம்பரில் இருந்து போனோ, எதுவுமே வராது என்றனர். நானும் அதே போன்று செய்தேன். அதன் பிறகு எனக்கு எதுவும் அந்த நம்பரில் இருந்து வரவில்லை.
நான் மட்டுமில்லை பலரும் இதுபோன்று மோசடி கும்பலின் வலையில் சிக்கி கொள்கின்றனர். எனது நண்பர் ஒருவர் கூட மோசடி கும்பலிடம் சிக்கி 5 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளார் என்றார். எனவே யாரும் இதுபோன்று போன்களில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றார்.