தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை கொண்டாட சென்னையில் இருந்து 12 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்

Published On 2025-01-12 08:24 IST   |   Update On 2025-01-12 08:24:00 IST
  • கடந்த 2 நாட்களில் மட்டும் 7,309 பஸ்கள் புறப்பட்டு சென்றுள்ளன.
  • ஆம்னி பஸ்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களின் மூலமாகவும் 3.5 லட்சம் பேர் வெளியூர்களுக்கு சென்றுள்ளனர்.

சென்னை:

கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் லட்சக்கணக்கான வெளியூர்வாசிகள் சென்னையில் வாழ்ந்து வருகிறார்கள். பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களின்போது, சொந்த ஊர்களுக்கு சென்று அவர்கள் விழாவை சிறப்பித்து வருவது வழக்கம். மக்களின் பயன்பாட்டுக்காக விழாக்காலங்களில் சிறப்பு பஸ்-ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி பொங்கல் பண்டிகையை சொந்த ஊருக்கு சென்று கொண்டாட சென்னைவாசிகள் விரும்பி, நேற்று முன்தினம் முதல் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று வருகிறார்கள். இதனால் பஸ்-ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி, தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் என மொத்தம் (10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை) 21,904 பஸ்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் கடந்த 2 நாட்களில் மட்டும் 7,309 பஸ்கள் புறப்பட்டு சென்றுள்ளன. இந்த பஸ்கள் மூலம் சுமார் 5 லட்சம் பேர் சாலை மார்க்கமாக வெளியூர்களுக்கு பயணித்துள்ளனர்.

சுமார் 200 ரெயில்களில் கடந்த 2 நாட்களில் சுமார் 3 லட்சம் பேர் பயணித்துள்ளனர். 50-க்கும் மேற்பட்ட விமானங்களில் கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலானோர் சென்றுள்ளனர். அதேபோல ஆம்னி பஸ்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களின் மூலமாகவும் 3.5 லட்சம் பேர் வெளியூர்களுக்கு சென்றுள்ளனர். குறிப்பாக கடந்த 2 நாட்களில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்கள் புறப்பட்டு சென்றுள்ளன. அந்தவகையில் கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து 12 லட்சம் பேர் பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இன்றும், நாளையும் 4,184 தினசரி பஸ்களுடன், 2,611 சிறப்பு பஸ்கள் என 6,175 பஸ்கள் சென்னையில் இருந்து இயக்கப்படுகின்றன. அதேபோல வெளியூர்களில் இருந்து சென்னைக்கு 4,390 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

வழக்கத்தை காட்டிலும் இந்தாண்டு வெளியூர் சென்ற கார்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பஸ்-ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகின்றன. குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் உட்கார கூட இடமின்றி கூட்டம் காணப்படுகிறது. ஒவ்வொரு ரெயிலிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

Tags:    

Similar News