பரங்கிமலை மாணவி கொலை வழக்கு- சதீஷ் மீது குண்டாஸ் பாய்ந்தது
- சதீஷை சிறையில் இருந்து சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
- சிபிசிஐடி போலீசாரின் பரிந்துரையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
சென்னை ஆலந்தூரை சேர்ந்த மாணவி சத்யபிரியா கடந்த 13-ந்தேதி பரங்கி மலை ரெயில் நிலையத்தில் வைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். சத்யாவை ரெயில் முன்பு தள்ளி கொலை செய்த வாலிபர் சதீஷ் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சதீசை காவலில் எடுத்து விசாரணை நடத்திய போலீசார் மீண்டும் புழல் சிறையில் அடைத்துள்ளனர். போலீஸ் காவலின்போது சதீஷ் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் சத்யா எனது காதலை ஏற்காமல் வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்ததால் திட்டமிட்டு கொலை செய்ததாக தெரிவித்திருந்தார்.
பொது இடத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதுமே பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதை தொடர்ந்து சதீஷ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்திருந்தனர். இந்தநிலையில் சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். குண்டர் சட்டம் பாய்ந்திருப்பதன் மூலம் கொலையாளி சதீஷ் ஓராண்டுக்கு சிறையில் இருந்து வெளிவர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கை விரைந்து முடித்து கொலையாளி சதீசுக்கு உச்சபட்ச தண்டனை வாங்கி கொடுக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுபோன்ற முக்கியமான வழக்குகளில் குற்றப்பத்திரிக்கையை விரைந்து தாக்கல் செய்து 3 மாதத்தில் வழக்கை முடிப்பார்கள். அதுபோன்ற நடவடிக்கையைத்தான் மாணவி சத்யா கொலையிலும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். இதன்காரணமாக குண்டர் தடுப்பு சட்ட காவலில் சதீஷ் சிறையில் இருக்கும் காலத்துக்குள்ளாகவே வழக்கு விசாரணையை முடித்துவிட சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.