பவானி ஆற்றில் வினாடிக்கு 25,200 கன அடி தண்ணீர் திறப்பு
- பவானிசாகர் அணையிலிருந்து 25,200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சத்தியமங்கலம்:
நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பில்லூர் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 25,200 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து இன்று 6-வது நாளாக 102 அடியாக நீடித்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு வரும் 25 ஆயிரம் கன அடி நீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் மேட்டூர் அணையில் இருந்து 1.45 லட்சம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டு வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 2 ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இந்த உபரி நீர் பவானி கூடுதுறையில் கலப்பதால் பவானியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கத்தால் சத்தியமங்கலம் அடுத்த புது கொத்துக்காடு பகுதியில் உள்ள விலை நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்கு விவசாயி பெரியசாமி என்பவர் தோட்டத்தில் சாகுபடி செய்த கதளி வாழைத் தோட்டத்திற்குள் வெள்ளம் புகுந்ததால் சுமார் ரூ. 15 லட்சம் மதிப்பிலான 4,200 வாழைகள், 300 தென்னைகளை வெள்ளம் சூழ்ந்தது.
வெள்ளம் வடியாவிட்டால் இன்னும் ஓரிரு நாட்களில் வாழைகள் அழுகி வீணாகிவிடும் என்றும், தோட்டக்கலை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் இன்றும் தொடர்ந்து பவானிசாகர் அணையிலிருந்து 25,200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் இரு கரையும் தொட்டபடி வெள்ள நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதன் காரணமாக இன்று 6-வது நாளாக கொடிவேரி அணையில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் இன்றும் கொடிவேரி அணையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேட்டூர் அணையில் இருந்து இன்று 1.45 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அம்மாபேட்டை, நெருஞ்சிப்பேட்டை, பவானி, கருங்கல்பாளையம் காவிரிகரை, கொடுமுடி போன்ற பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் வசிக்கும் 369 குடும்பங்களைச் சேர்ந்த 1,277 பேர் 14 முகாம்களில் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.