தமிழ்நாடு

கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு தமிழக அரசு உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2022-07-03 12:16 IST   |   Update On 2022-07-03 12:16:00 IST
  • தமிழக அரசு ஒப்புதல் அளித்தால் தான் மத்திய அரசின் ஒப்புதலையும் பெற்று நிதியை பெற முடியும்.
  • நடப்பாண்டிற்குள் பணிகளைத் தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

சென்னை விமான நிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை கடந்த 10 மாதங்களுக்கு முன்பே தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு இன்னும் அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

விரிவான திட்ட அறிக்கை அரசின் ஆய்வில் இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் 6-ந்தேதி சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புக் கொண்டார்.

அதன்பின் 6 மாதங்களாகும் நிலையில், இன்னும் மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்ட அறிக்கைக்கு அரசு ஒப்புதல் அளிக்காததை நியாயப்படுத்த முடியாது.

கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு விட்டது. சென்னையையும், புதிய பேருந்து நிலையத்தையும் இணைக்க இப்போதுள்ள புறநகர் ரெயில், நகரப் பேருந்து சேவைகள் போதுமானவையல்ல. அதனால் பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாவார்கள்.

தமிழக அரசு ஒப்புதல் அளித்தால் தான் மத்திய அரசின் ஒப்புதலையும் பெற்று நிதியை பெற முடியும். எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். நடப்பாண்டிற்குள் பணிகளைத் தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News