வல்லூர் அனல்மின்நிலையத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்த கலெக்டர்
- வடமாநில தொழிலாளர்களிடம் இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
- வடமாநில தொழிலாளர்களுக்கு பாதிப்புகள் இருப்பதாக வெளியான தகவல் வதந்தி. பொய்யான இந்த வதந்திகளை நம்ப வேண்டாம்
பொன்னேரி:
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர் மீது தாக்குதல் நடைபெறுவதாக பரவிய வதந்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வடமாநில தொழிலாளர்களிடம் இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வல்லூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் சந்தித்து குறைகள், பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் கலெக்டர் கூறும்போது, தமிழகத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதிப்புகள் இருப்பதாக வெளியான தகவல் வதந்தி. பொய்யான இந்த வதந்திகளை நம்ப வேண்டாம். வடமாநில தொழிலாளர்கள் சிறிய புகார்களாக இருந்தாலும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தற்போது 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை எந்தவிதமான பிரச்சினைகளும் வடமாநில தொழிலாளர்களுக்கு இல்லை என்றார்.
அப்போது துணை ஆணையர் மணிவண்ணன், சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, தாசில்தார் செல்வகுமார் உடன் இருந்தனர்.
இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் நலன் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், கோட்டாட்சியர் சரவணகண்ணன், தொழிற்சாலை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.