தடை காலம் முடிந்தது: முதல் ஞாயிற்றுக்கிழமை காசிமேட்டில் விற்பனைக்கு குவிந்த சிறிய வகை மீன்கள்
- மீன்பிடி தடைகாலம் முடிந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
- காசிமேடு மார்க்கெட் முழுவதும் மக்கள கூட்டமாக காணப்பட்டது.
ராயபுரம்:
தமிழகத்தில் ஏப்ரல் 15-ந்தேதி முதல் கடந்த 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்தது. தடைகாலம் முடிந்து 15-ந் தேதி முதல் மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மொத்தம் 1200 விசைப்படகுகள், 800-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். மீன்பிடி தடைகாலம் முடிந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
தடைகாலம் முடிந்து இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுமார் 100 விசைப்படகு மீனவர்கள் அதிகாலையில் கரை திரும்பினர்.
பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் அதிகாலை முதலே வியாபாரிகளும், பொதுமக்களும் மீன் ஏலம் விடும் பகுதியில் அதிக அளவில் குவிந்தனர். இதனால் காசிமேடு மார்க்கெட் முழுவதும் மக்கள கூட்டமாக காணப்பட்டது.
ஆனால் எதிர்பார்த்த அளவு பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரவில்லை. சிறியவகை நெத்திலி, சங்கரா, காரப்பொடி உள்ளிட்ட மீன்கள் அதிக அளவு விற்பனைக்கு குவிந்து இருந்தது.
ஆனாலும் மீன் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. கடந்த வாரம் விலையே இன்றும் இருந்தது. வஞ்சிரம் உள்ளிட்ட பெரிய வகை மீன்கள் எதுவும் விற்பனைக்கு வராததால் அசைவ பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
எனினும் அவர்கள் சிறிய அளவிலான மீன்களை ஆர்வத்துடன் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். வஞ்சிரம்- ரூ.1400, வவ்வாள்- ரூ. 1100,சங்கரா ரூ.400 முதல்ரூ.800 வரை விற்கப்பட்டது.
மீனபிடி தடைகாலம் முடிந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு மொத்த வியாபாரிகள் மீன் ஏலக்கூடத்தில் வந்து மீன்களை மொத்தமாக வாங்கிச் சென்றதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். காசிமேடு பகுதி மீண்டும் மீன் விற்பனையில் களை கட்டி இருந்தது.
வழக்கமாக ஆழ்கடலில் விசைப்படகில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் குறைந்தது 10 முதல் 15 நாட்கள் வரை கடலில் தங்கி மீன்பிடித்து கரைக்கு திரும்புவது வழக்கம்.
எனவே அடுத்த வாரம் அதிக அளவிலான விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பும் போது பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மீன்விலை குறையும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.வரும் நாட்களில் கரை திரும்பினால் மீன்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, விசைப்படகு மீனவர்கள் குறைந்தது 2 வாரம் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிப்பது வழக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குறைந்த அளவு விசைப்படகு மீனவர்கள் கரைக்குதிரும்பி உள்ளனர். சிறியவகை மீன்கள் அதிக அளவு விற்பனைக்கு வந்திருந்தது. பெரியவகை மீன்கள் அதிகம் வரவில்லை. இதனால் மீன்விலையிலும் பெரிய அளவில் மாற்றம் இல்லை. அடுத்த வாரம் ஆழ்கடல் விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பும்போது பெரிய மீன்கள் விற்பனைக்கு வரும். அப்போது மீன்விலை குறையும் என்றார்.