தமிழ்நாடு

உளுந்தூர்பேட்டை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து புதுவை முதியவர் பலி

Published On 2023-09-19 11:53 IST   |   Update On 2023-09-19 11:53:00 IST
  • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி மரத்தில் மோதியது.
  • விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை:

புதுவை மாநிலம் முத்தியால்பேட்டை பஜனை கோவில் வீதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 62). இவர் அமுல்யா, ஜெயபாண்டியன், நாராயணன் ஆகியோருடன் சபரிமலைக்கு காரில் சென்றார். இந்த காரினை சின்னசேலம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் ஓட்டிச் சென்றார்.

சாமி தரிசனம் செய்து விட்டு புதுவைக்கு திரும்பினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள ஆசனூர் பெட்ரோல் பங்க் அருகே இன்று அதிகாலை வந்தனர். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி மரத்தில் மோதியது.

இதில் தியாகராஜனுக்கு தலை மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்த எடக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தியாகராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News