சிவகங்கை அரண்மனை வாசலில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள்: பா.ஜ.க.வினர் மீது வழக்கு
- உரிய அனுமதியின்றி பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
- அரண்மனை வாசலில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
சிவகங்கை:
தமிழகத்தில் அவ்வப்போது பிளக்ஸ் போர்டுகள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இருப்பினும் அரசியல் கூட்டங்கள், இல்ல நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதியின்றியும், விதிகளை மீறியும் பிளக்ஸ் போர்டுகள் வைப்பது தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் உரிய அனுமதியின்றி பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மீறி பிளக்ஸ் போர்டு வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சிவகங்கை அரண்மனை வாசலில் நேற்று மாலை மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்ற பா.ஜ.க. பொதுக் கூட்டம் நடந்தது. இதற்காக அரண்மனை வாசலில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் முறையாக அனுமதி பெறவில்லை. இதையடுத்து அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்ததாக பால முருகன், கண்ணன், கண்ணையா, சதீஷ், பிரபு தாசிகாளை, கவுதம்துரை மற்றும் சுகனேஸ்வரி, செந்தில் ஆகிய 9 பா.ஜ.க.வினர் மீது சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.