கன்னியாகுமரி-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும்- விஜய் வசந்த் எம்.பி. கடிதம்
- கன்னியாகுமரி வந்து சேர ரெயில் வசதி மிக குறைவாக காணப்படுகிறது.
- கன்னியாகுமரி மாவட்டம் ஒரு சுற்றுலா தலமாக அமைந்திருப்பதால் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர்.
சென்னை:
மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தின் தென்கோடியில் அமைந்துள்ளது. எங்கள் மாவட்டத்தில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் சென்னைக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
பணியாளர்கள், மாணவர்கள், மருத்துவ வசதி தேடுபவர்கள், தொழில் முனைவர்கள் மற்றும் பல்வேறு விஷயங்களுக்காக கன்னியாகுமரி மற்றும் சென்னை இடையே மக்கள் அடிக்கடி பயணம் செய்கின்றனர்.
மேலும் கன்னியாகுமரி மாவட்டம் ஒரு சுற்றுலா தலமாக அமைந்திருப்பதால் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர். ஆனால் கன்னியாகுமரி வந்து சேர ரெயில் வசதி மிக குறைவாக காணப்படுகிறது.
ஏற்கனவே கன்னியா குமரியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக ஒரு தினசரி ரெயில் தேவை என்ற கோரிக்கையை ரெயில்வே துறையிடம் எழுப்பி உள்ளோம்.
ஆகவே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வந்தேபாரத் ரெயில் ஒன்றினை கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்ல ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இது கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு பயன் அளிப்பதுடன் தென் தமிழகத்தின் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். கூடுதலாக மிக விரைவில் அறிமுகப்படுத் தப்பட உள்ள படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில் ஒன்றினையும் கன்னியாகுமரி-சென்னை இடையே ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.