தமிழ்நாடு

நாரதர் நகர்வலம்- எழும்பூர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டரை தேடி அலையும் பயணிகள்...

Published On 2025-01-24 17:18 IST   |   Update On 2025-01-24 17:18:00 IST
  • வெளியூர் வாசிகளுக்கு அறிவிப்பு பலகையை தேடி கண்டுபிடிப்பதே கஷ்டமாகத்தான் இருக்கிறது என்றபடி நகர்ந்தார்கள்.
  • டிக்கெட் கவுண்டரில் ஆட்டோமெட்டிக் டிக்கெட் வழங்கும் 2 எந்திரங்கள் காட்சி பொருள் போல் நிற்கிறது.

எழும்பூர் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டே ரெயில் நிலையத்துக்கு வழிகேட்டு அலையும் அவலம் தொடர்கிறது. இதை கேள்விப்பட்டதும் என்னடா இது? கண்கட்டி வித்தை போல் சொல்கிறார்கள். அதையும் தான் பார்த்து விடுவோமே என்று நாரதரும் புறப்பட்டார்.

ரெயில் நிலையத்தின் வடக்கு பிரதான வாயில் முற்றிலும் இடித்து அகற்றப்பட்டு மறுவடிவமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தகர தகடுகளால் ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.

தெற்கு நுழைவாயில் வழியாக உள்ளே வந்த நாரதர் பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு வரும் நடை மேம்பாலம் வழியாக வந்தார். அப்போது டிக்கெட் எடுக்கும் கவுண்டர் எங்கிருக்கிறது என்று தெரியாமல் நான்கைந்து பேர் தவித்து கொண்டிருந்தார்கள். நாரதரை பார்த்ததும் சாமியார் தானே.... இங்கு தான் இருப்பவராக இருக்கும் என நினைத்து 'சாமி, டிக்கெட் கவுண்டர் எங்கே இருக்கு?' என்றார்கள்.

அதை கேட்டதும் நானும் அதை தேடித்தான்பா சென்று கொண்டிருக்கிறேன்! வாங்க எல்லோரும் சேர்ந்து தேடி கண்டுபிடிப்போம் என்று அவர்களையும் அழைத்து கொண்டு புறப்பட்டார்.

நேர் எதிரில் ஒரு 'லிப்ட்' அவுட் ஆப் சர்வீஸ் என்று எழுத்துக்கள் மின்னொளியில் ஓடிக் கொண்டிருந்தது. லிப்டில் செல்ல முடியாது என்றதும் சுற்றும் முற்றும் வழியை தேடினார்கள்.


வேனல்ஸ் ரோட்டுக்கு செல்லும் நடைபாதை இடிக்கப்பட்டிருந்தது. எஸ்கலேட்டர் செயல்படாது என்று மூடி வைக்கப்பட்டிருந்தது.

அங்கிருந்து பார்த்ததும் மெட்ரோ ரெயில் நிலையம் தெரிந்தது. அந்த பகுதிக்கு செல்வதற்கு 'சிக்சாக்' வடிவில் சாய்பு பாதை இருந்தது. அதன் வழியாக இறங்கியதும் இடது பக்கம் செல்வதா? வலது பக்கம் செல்வதா? என்ற குழப்பம்.

இடது பக்கம் வழியாக ரெயில் பயணிகள் சாரை சாரையாக வந்து கொண்டிருந்தார்கள். அவர்களை பார்த்ததும் கவுண்டர் அங்குதான் இருக்கும் என நினைத்து சென்றார்கள். அங்கு கவுண்டர் இல்லாததால் அந்த வழியாக சென்றவர்களிடம் விசாரித்தார்.

மீண்டும் வந்த வழியே திரும்பி மெயின் ரோட்டுக்கு செல்லுங்கள். அங்குதான் கவுண்டர் இருக்கிறது. அதோ அறிவிப்பு பலகை இருக்கிறதே கண்ணுக்கு தெரியவில்லையா? என்றார்.

உண்மைதான்பா. கண்ணுக்கு தெரியவில்லை. நீங்கள் தினமும் வந்து செல்பவர்களாக இருக்கும். எனவே உங்களுக்கெல்லாம் கண்ணில்படுகிறது. வெளியூர் வாசிகளுக்கு அறிவிப்பு பலகையை தேடி கண்டுபிடிப்பதே கஷ்டமாகத்தான் இருக்கிறது என்றபடி நகர்ந்தார்கள்.

மூட்டை முடிச்சுகளுடன் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் சுமந்து வந்த களைப்பில் ஆட்டோக்கள் நிறுத்தி இருந்த பகுதியில் மக்கள் செல்லாத நடைபாதையில் சுமைகளை இறக்கி வைத்தார்கள். அவர்களை இங்கு அமரக் கூடாது என்று ஆட்டோ டிரைவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக டிக்கெட் கவுண்டரை கண்டுபிடித்து விட்டார்கள். டிக்கெட் கவுண்டருக்கு செல்ல முடியாதபடி இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தட்டுத்தடுமாறி உள்ளே சென்று டிக்கெட் எடுத்து சாதித்து விட்டார்கள்.

அதே நேரத்தில் உள் பகுதியில் கழிவுமண் ஏற்றி வந்த டிப்பர் லாரி வெளியே செல்ல வழியில்லாமல் தடு மாறியது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் இருசக்கர வாகன ஓட்டிகளை சத்தம் போட்டார். இந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்தக் கூடாது. போலீஸ் ஆவண காப்பகம் அருகிலும் மெட்ரோ வளாகத்திலும் வாகன பார்க்கிங் வசதி உள்ளது என்றார்.

அதைகேட்ட வாகன ஓட்டிகள் மெட்ரோ பார்க்கிங் செல்ல வேண்டுமென்றால் பூந்தமல்லி சாலை வழியாக உள்ளே செல்ல வேண்டும். மீண்டும் அதே வழியில் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் நடந்து டிக்கெட் கவுண்டருக்கு வர வேண்டும்.

அதுமட்டுமல்ல பார்க்கிங் கட்டணமும் ரூ.30 செலுத்த வேண்டும். 10 ரூபாய் டிக்கெட் வாங்க பார்க்கிங் கட்டணம் ரூ.30... பணிகள் முடியும் வரை இந்த கட்டணத்தையும் ரூ.10 ஆக நிர்ணயிக்கலாமே. மேலும் பார்க்கிங் பகுதியில் இருந்து டிக்கெட் கவுண்டருக்கு செல்ல ஏதாவது ஒரு ஓரமாக நடந்து செல்ல வழி அமைக்கலாமே. பயணிகளுக்கு வசதி செய்து கொடுக்காமல் தவறை அவர்கள் மீது திருப்பினால் எப்படி? -பயணியின் அந்த நியாயமான கேள் க்கு போலீஸ்காரரால் பதில் சொல்ல முடியவில்லை.

அந்த வேடிக்கையை பார்த்துவிட்டு ரெயில் நிலையத்துக்கு செல்ல புறப்பட்டார் நாரதர். கவுண்டரில் இருந்து ரெயில் நிலையத்துக்கு செல்ல வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகை நட்சத்திர ஓட்டல்களில் வைக்கப்பட்டிருக்கும் நிகழ்ச்சி நிரல் போர்டு போல் உள்ளது.

அந்த வழிகாட்டி பலகையை பெரிய அளவில் வைத்து மின்சார ரெயில் மற்றும் விரைவு ரெயில்களுக்கு செல்லும் வழி! நடைமேடை 1 முதல் 11 வரை செல்ல வேண்டிய பயணிகள் இந்த வழியே செல்லவும் என்று தெளிவாக வைத்திருக்கலாம். அப்போதுதான் சாதாரண மக்களுக்கும் புரியும்.

அதே போல் உள்ளே சென்றதும் லிப்ட் அருகே உள்ள நடைபாதைகளிலும் கண்ணில் படும்படி வழி காட்டு பலகைகளை தெளிவாக வைக்க வேண்டும்.

டிக்கெட் கவுண்டரில் ஆட்டோமெட்டிக் டிக்கெட் வழங்கும் 2 எந்திரங்கள் காட்சி பொருள் போல் நிற்கிறது. அந்த 2 எந்திரங்களும் 11 முதல் 1-வது நடைமேடை வரை செல்லும். நடைமேம்பாலத்தில் தற்காலிகமாக வைத்தால் பயணிகளுக்கு சவுகரியமாக இருக்குமே!

மறுவடிமைப்பு சரி. ஆனால் மறுபடியும் பயணிகளுக்கு சிரமத்தை கொடுக்கலாமா? சிரமத்தை தாங்க மக்கள் தயார். ஆனால் அதை குறைக்கவும், எளிதாக்கவும் சம்பந்தப்பட்டவர்கள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே உண்மை. சிட்டிக்குள் சிட்டி சன்கள் படும் வேதனையை பார்த்து நாராயணா... நாராயணா... என்ற படியே நகர்ந்தார் நாரதர்.

Tags:    

Similar News