பெரியார் - பிரபாகரனை கொச்சைப்படுத்தும் போக்கை நிறுத்துக..!- பழ.நெடுமாறன்
- பெரியார் அவர்கள் பெண்ணுரிமைக்காகத் தொடர்ந்து போராடியவர்.
- பெரியார் அவர்களின் முக்கிய கொள்கைகளில் ஒன்றான சாதி ஒழிப்பினைச் செயல்படுத்திய பெருமை பிரபாகரன் அவர்களுக்கு உண்டு.
பெரியார் – பிரபாகரனை கொச்சைப்படுத்தும் போக்கை நிறுத்துங்கள், உலகத் தமிழர்கள் மன்னிக்கமாட்டார்கள் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உலகத் தமிழர்களின் இருபெரும் ஆளுமைகளான பெரியாரையும், பிரபாகரனையும் ஒருவருக்கெதிராக மற்றொருவரையும் நிறுத்த செய்யப்படும் முயற்சி குறுகிய அரசியல் ஆதாய நோக்கத்தோடு செய்யப்படுவதாகும். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பெரியார் அவர்கள் பெண்ணுரிமைக்காகத் தொடர்ந்து போராடியவர். அவரது இக்கொள்கையை நிறைவேற்றும் வகையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பெண்களையும் சேர்த்து, ஆயுதப் பயிற்சி அளித்து களத்தில் போராட வைத்தப் பெருமை பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உண்டு. வேறு எந்த நாட்டின் விடுதலை இயக்கத்திலும் பெண் போராளிகள் சேர்க்கப்பட்டதில்லை.
2009ம் ஆண்டு இறுதிப்போருக்கு முன்பாக தமிழீழத்தின் பெரும் பகுதி விடுதலைப்புலிகளின் ஆட்சிக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அப்போது பெரியார் அவர்களின் முக்கிய கொள்கைகளில் ஒன்றான சாதி ஒழிப்பினைச் செயல்படுத்திய பெருமை பிரபாகரன் அவர்களுக்கு உண்டு.
விடுதலைப்புலிகள் திருமணம் செய்துகொள்ளவேண்டுமானால், சாதி மறுப்புத் திருமணம் அல்லது விதவைத் திருமணம் ஆகிய இரண்டில் ஒன்றை பின்பற்றவேண்டும் என ஆணையிட்டார். அவரது திருமணம் முதல் விடுதலைப்புலிகள் பலரின் திருமணங்கள் இத்தகைய புரட்சிகர திருமணங்களாகவே அமைந்தன. அவற்றைப் பார்த்த மக்களும் அவர்களைப் பின்பற்றி சாதி மறுப்புத் திருமணங்களை செய்துகொள்ள வழிவகுக்கப்பட்டது.
சாதி ஏற்றத்தாழ்வுகளைக் கடைப்பிடிப்பவர்கள் மீது விடுதலைப்புலிகள் கடும் நடவடிக்கை எடுத்தனர். மேலும் பல புரட்சிகரமான சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். பெரியார் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், தனது கோட்பாடுகளைச் செயல்படுத்தி வரும் பேரன் பிரபாகரனைச் சந்தித்துப் பாராட்ட நேரில் தமிழீழம் சென்றிருப்பார் என்பதில் ஐயமில்லை.
பெரியாரைப் பற்றியோ அல்லது பிரபாகரனைப் பற்றியோ எத்தகைய புரிந்துணர்வும் இல்லாமல் அவர்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுபவர்கள் தங்களின் தகாதப் போக்கினை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
சாதி, சமய வேறுபாடுகளால் பிளவுப்பட்டுக் கிடக்கும் தமிழர்களை ஒன்றுபடுத்தவும், பகுத்தறிவுச் சமதர்மப் பாதையில் தொடர்ந்து நடக்கவும் அரும்பாடுபட்ட இரு தலைவர்களையும் கொச்சைப்படுத்தும் போக்கில் நடந்துகொள்பவர்களைத் தமிழ்கூறும் நல்லுலகம் ஒருபோதும் மன்னிக்காது என எச்சரிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.