கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்- பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்
- தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நிகழ்ந்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
- தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தமிழகத்தின் 36 வீராங்கனைகள் உட்பட 42 பேர் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தேசிய கபடி போட்டியில் பங்கேற்க பஞ்சாப் சென்றுள்ளனர்.
போட்டியில் விதிகளை மீறியதாக முறையிட்ட தமிழக வீராங்கனைகள், தமிழக பயிற்சியாளர் பாண்டியன் மீது பீகார் போட்டியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலா விஜயகாந்த் வெளியிட்டுள்ள பதவில் கூறியிருப்பதாவது:-
பஞ்சாபில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டியில், நமது தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு கல்லூரிகள் பங்கேற்ற நிலையில், தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நிகழ்ந்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
விளையாட்டு என்பது அனைவரும் சமமாக இணைந்து திறமையை நிரூபிக்கக்கூடிய மேடை. ஆனால் சக வீராங்கனைகளை, அதிலும் தமிழக மாணவிகளைத் தாக்கியது மிகவும் கண்டிக்கத் தக்க செயல்.விளையாட்டு என்பது வீரத்துடன் சவால்களை எதிர்கொள்வதற்காகவே இருக்க வேண்டும்; ஆனால், கோழைத்தனமாகச் சக வீராங்கனைகளை தாக்குவது என்பது ஒரு தவறான தரம் கெட்ட செயல்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அந்த மாணவிகள் பத்திரமாகத் தமிழகம் திரும்பத் தமிழக அரசு அனைத்து தேவையான உதவிகளையும் செய்து, அவர்களுக்குரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.