தமிழ்நாடு

தமிழகத்தில் பாதுகாப்பாக இருக்கிறோம்- குடும்பத்தினருக்கு வீடியோவில் பேசி அனுப்பும் வடமாநில தொழிலாளர்கள்

Published On 2023-03-05 10:45 GMT   |   Update On 2023-03-05 10:45 GMT
  • தமிழகம் முழுவதும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருவதாக கடந்த ஒரு வாரமாக வதந்தி பரவி வருகிறது.
  • வடமாநில தொழிலாளர்களின் அச்சத்தை போக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

திருப்பூர்:

தமிழகம் முழுவதும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருவதாக கடந்த ஒரு வாரமாக வதந்தி பரவி வருகிறது.

குறிப்பாக வடமாநில தொழிலாளர்கள் அதிகமாக உள்ள கொங்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறி, வீடியோக்களும் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன.

ஆனால் இந்த வீடியோக்களுக்கும் மேற்கண்ட பகுதிகளுக்கும் சம்பந்தமில்லாமல் இருந்து வருகிறது. இருப்பினும் தொடர்ந்து இதுபோன்ற வீடியோக்கள் பரவி வந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதற்கிடையே வடமாநில தொழிலாளர்களின் அச்சத்தை போக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது.

அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகர போலீஸ், சூப்பிரண்டு அலுவலகம் சார்பில் வடமாநில தொழிலாளர்களுக்காக 24 மணி நேரமும் செயல்படும் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், புகார்கள் தெரிவிக்க மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கும் விதமாக செல்போன் எண்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ஒவ்வொரு பனியன் நிறுவனத்திலும் போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகக்கூறி, வடமாநில தொழிலாளர்கள் பலரும் குடும்பத்தினருக்கு வீடியோ பதிவிட்டு வருகிறார்கள்.

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். பீகார், ஒடிசா, உ.பி., ம.பி. மற்றும் ஜார்க்கண்ட் இந்த பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் தற்போது தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் வீடியோவாக குடும்பத்தினருக்கு வெளியிட்டு வருகிறார்கள்.

மேலும், போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் அவர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

இதேபோல கோவையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களை அதிகாரிகள், போலீசார் நேரில் சந்தித்து சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம், யாரும் அச்சப்பட வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

கோவை குறிச்சி பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து கலந்து ரையாடினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுவதால் யாரும் பயப்படத் தேவையில்லை என்று அந்த மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை நேரில் சந்தித்து பேசியிருக்கிறோம். மேலும் இந்தியில் அச்சிடப்பட்ட விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதில் இருக்கும் தொடர்பு எண்ணுக்கு பேசும்படியும் கூறி இருக்கிறோம். தொழிலாளர்களிடம் பேசியதில் அவர்கள் தங்களுக்கு எந்தவித அச்சமும் இல்லை என கூறி உள்ளனர் என்றார்.

இதேபோல டி.ஜி.பி. சைலேந்திரபாபு, அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட தொழிற்சாலைகளில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து தைரியம் அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி குனியமுத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ளவர்கள் எங்களை சகோதரர்களை போல் நடத்துகிறார்கள். எங்களுக்கு இங்கு எந்த குறையும் கிடையாது. எங்கள் ஊரில் எவ்வாறு இருந்தோமோ அதே போன்று இங்கும் சுதந்திரமாக வாழ்ந்து வருகிறோம். நாங்கள் தாக்கப்படுகிறோம் என்பது வதந்தி என்பதை தெரிவிக்கிறோம். இன்று மட்டுமில்லை இன்னும் எத்தனை வருடம் இங்கு இருந்தாலும் தமிழர்கள் எங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் கூறுகையில் 500-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களை சந்தித்து பேசி உள்ளேன். யாரும் தாங்கள் தாக்கப்பட்டதாக தெரிவிக்கவில்லை. அவர்கள் ஊரில் எப்படி சுதந்திரமாக இருந்தார்களோ, அதேபோல் இங்கும் சுதந்திரமாக இருப்பதாகவே தெரிவித்தனர் என்றார்.

Tags:    

Similar News