நெல்லையில் டாடாவின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- விக்ரம் சோலார் லிமிடெட் தொழிற்சாலை அமைப்பதற்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.
- தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த சோலார் பேனலில் "வாழ்த்துகள்" என்று எழுதி கையொப்பமிட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அங்கிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லைக்கு காரில் புறப்பட்டார். அவருக்கு பாளை கே.டி.சி.நகர் மேம்பாலம் அருகே தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 3,800 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா பவர் சோலார் நிறுவனம் அமைத்துள்ள 4.3 GW Solar Cell மற்றும் Module உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, உற்பத்தியையும் தொடங்கி வைத்தார்.
பின்னர், தொழிற்சாலையை பார்வையிட்டு, அங்கு பணிபுரியும் பெண் பணியாளர்களிடம் உரையாடி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த சோலார் பேனலில் "வாழ்த்துகள்" என்று எழுதி கையொப்பமிட்டார்.
பெண்களுக்கு 80 சதவிகித வேலைவாய்ப்பு என்பது மட்டுமின்றி, பெண்களுக்கு தங்கும் விடுதி வசதிகளும் அளிக்கப்படவுள்ளது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.
தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 2574 கோடி ரூபாய் முதலீட்டில், 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 3 GW solar Cell மற்றும் 6 GW Module உற்பத்தித்திறன் கொண்ட விக்ரம் சோலார் லிமிடெட் தொழிற்சாலை அமைப்பதற்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.
இந்த நிறுவனத்திலும் பெரும்பான்மையான வேலைவாய்ப்புகள் பெண்களுக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது.