திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் கைது... அரியானாவில் சுற்றி வளைத்த தனிப்படை
- கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் பணத்தை மீட்டுள்ளனர்.
- அரியானா, குஜராத் மாநிலங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ஆம் தேதி அதிகாலை 4 ஏடிஎம் எந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளைக் கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில் கொள்ளையர்கள் அரியானாவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
திருவண்ணாமலையில் ஏ.டி.எம்.களை நோட்டமிட்டு கைவரிசை காட்டிய அவர்கள், பெங்களூர் சென்று அங்கிருந்து விமானம் மூலம் அரியானா சென்றுள்ளனர். அவர்களுக்கு மற்ற மாநிலத்தவர்கள் உதவி செய்துள்ளனர். இது தொடர்பாக கர்நாடகா, அரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சிலரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் அரியானா சென்ற தனிப்படை போலீசார், அங்கு கொள்ளைக் கும்பல் தலைவன் உள்ளிட்ட 2 பேரை கைது செய்துள்ளனர். கொள்ளை கும்பல் தலைவன் முகமது ஆரிப் (வயது 35), ஆஜாத் (வயது 37) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் பணத்தை மீட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் விமானம் மூலம் தமிழகத்திற்கு அழைத்து வருகிறார்கள்.
ஏற்கனவே அரியானா, குஜராத் மாநிலங்களில் தனிப்படை போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது கைது செய்யப்பட்டவர்களின் கூட்டாளிகள் 6 பேர் இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை அரியானா மற்றும் குஜராத்தில் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.