சசிதரூரை வரவேற்க ஆர்வம் காட்டாத தமிழக காங்கிரஸ்
- சசிதரூர் வருகை பற்றி தமிழக காங்கிரஸ் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை.
- மிக குறைந்த எண்ணிக்கையிலேயே வாக்களிக்க தகுதியுடைய நிர்வாகிகள் வந்திருந்தார்கள்.
சென்னை:
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசிதரூர் நேற்று சென்னை வந்தார். தமிழகத்தில் உள்ள வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக நேற்று இரவு 8 மணியளவில் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார்.
சசிதரூர் வருகை பற்றி தமிழக காங்கிரஸ் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை. அதேபோல் அவரை வரவேற்கவும் மாநில கமிட்டி நிர்வாகிகள் ஆர்வம் காட்டவில்லை.
மிக குறைந்த எண்ணிக்கையிலேயே வாக்களிக்க தகுதியுடைய நிர்வாகிகள் வந்திருந்தார்கள். இது தொண்டர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அப்படியானால் சோனியா, ராகுல் ஆதரவு மல்லிகார்ஜுன கார்கேவுக்குத்தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக சசிதரூரை வரவேற்க வந்த மாநில பொதுசெயலாளர் அருள் பெத்தையாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
சசிதரூர், மல்லிகார்ஜுன கார்கே இருவருமே அதிகாரபூர்வ வேட்பாளர்கள் என்றும் சோனியா-ராகுல் யாருக்கும் ஆதரவு இல்லை என்பதையும் தேர்தல் அதிகாரி மிஸ்திரி ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டார்.
அப்படியிருந்தும் வரவேற்க தயங்கியது ஆச்சரியம்தான். மல்லிகார்ஜுன கார்கே வரும்போதும் இதே நிலைப்பாட்டை எடுத்தால் சரிதான். அப்போது வரவேற்றால் ரகசியமாக கார்கேவை ஆதரிக்க வற்புறுத்தப்படுவதாகவே தோன்றும்.
நேற்று நாங்கள் அழைத்து இருந்ததே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த 15 பேரைதான். அதில் 12 பேர் வந்திருந்தனர். எனவே எதிர்பார்த்தபடி 200-க்கும் மேற்பட்ட வாக்குளை பெறுவோம் என்றார்.
மல்லிகார்ஜுன கார்கே வருகிற 13-ந் தேதி (வியாழன்) சென்னை வருகிறார். சத்திய மூர்த்தி பவனுக்கு செல்லும் அவர் கட்சியினரிடம் ஆதரவு திரட்டுகிறார்.