தமிழ்நாடு

அட்சய பாத்திரத்தில் பிச்சை கேட்பது போன்று கேட்கவில்லை: மத்திய அரசு மீது அமைச்சர் மனோ தங்கராஜ் சாடல்

Published On 2023-12-13 08:01 IST   |   Update On 2023-12-13 08:01:00 IST
  • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இடைக்கால நிதியாக சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு பிரதமருக்கு கடிதம்.
  • மத்திய அரசு சுமார் 400 கோடி ரூபாய் ஒதுக்கியது.

மிச்சாங் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. கடந்த 3 மற்றும் 4-ந்தேதி பெய்த கனமழையால் ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கியது.

இன்னும் சில இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில்தான் உள்ளது. போர்க்காள அடிப்படையில் தமிழக அரசு மீட்புப்பணியை மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகர் சகஜ நிலைக்கு திரும்பிவிட்டது.

இந்த புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இடைக்கால நிவாரணமாக சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

முதல்வர் கடிதத்திற்குப் பிறகு மததிய அரசு சுமார் 450 கோடி ரூபாய் நிதி வழங்கியது. முதலமைச்சர் ஐந்தாயிரம் கோடி ரூபாய் கேட்ட நிலையில், மத்திய அரசு அதில் 10 சதவீதம் கூட ஒதுக்கவில்லை என திமுக-வினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில் "ஐந்தாயிரம் கோடி ரூபாய் கேட்டால், 400 கோடி ரூபாய் தந்தால் எப்படி போதுமானதாக இருக்கும். நாங்கள் அட்சய பாத்திரத்தில் பிச்சை கேட்பது போன்று கேட்கவில்லை. நாங்கள் கொடுத்த பணத்தை கேட்கிறோம்.

ஜி.எஸ்.டி. வரி வசூலில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் கிடைக்கக் கூடிய நிதியில் நாம் கடைசியாக இருக்கிறோம். இதுதான் வருத்தமாக உள்ளது. ஐந்தாயிரம் கோடி ரூபாய்க்கு 400 கோடி ரூபாய் என்பதை நியாயப்படுத்தவே முடியாது. இதனால் மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தர வேண்டும் என்பதுதான் நம்முடைய எதிர்பார்ப்பு" என்றார்.

Tags:    

Similar News