தமிழ்நாடு
null

நானே நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்கிறேன் - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

Published On 2024-09-30 10:00 GMT   |   Update On 2024-09-30 10:01 GMT
  • துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
  • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு அமைச்சரவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்டு, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நான்கு அமைச்சர்கள் அமைச்சரவையில் நேற்று (செப்டம்பர் 29) புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில், தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், தி.மு.க. தொண்டர்கள், மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், பல மாவட்டங்களில் இருந்து தி.மு.க. கட்சியினர் சென்னை பயணம் மேற்கொண்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே தன்னை சந்திக்க வரும் கட்சியினருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்த எக்ஸ் தள பதிவில் அவர், "தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள், என்னை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்ற முனைப்போடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வருகிறீர்கள். உங்களுடைய அன்பு என்னை நெகிழச் செய்கிறது. அதற்கு என்றும் நன்றிக்குரியவனாக நான் இருப்பேன்."

"எனினும், நம் கழகத்தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கட்டளையின்படி, அவரவர் பகுதிகளில் நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. எனவே, மக்கள் பணி – கழகப்பணியில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்."

"என்னைச் சந்திப்பதற்காகச் சென்னைக்குப் பயணம் செய்வதைக் கழக உடன் பிறப்புகள் தவிர்க்குமாறு அன்போடும் – உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். பல்வேறு மாவட்டங்களில் நான் அடுத்தடுத்துச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், நானே உங்களை அங்கே நேரில் சந்தித்து உங்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News